தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார், முதல் தடுப்பூசியை மருத்துவர் சங்கத்தலைவர் செந்தில் போட்டுக்கொண்டார்.

கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ச்சியாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அரசு எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக தொற்று பாதிப்பு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசியில் வெற்றிகரமாக கோவிட்ஷீல்டு, கோவாக்சின் மருந்து நடைமுறைக்கு வந்தது.

முதல்கட்டமாக இன்று நாடு முழுவதும் 3 கோடி முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்துக்கான ஒதுக்கீடாக 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்தன. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 850 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மருத்துவர் சங்கத் தலைவர் செந்தில் போட்டுக்கொண்டார். பின்னர் மருத்துவ பணியாளர்கள், முன்கள வீரர்களுக்கு போடப்பட்டது. இந்த பணி இன்று மாலை 5 மணி வரை நடக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE