பிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர்

கோவை மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறையில், பிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டு இருந்தது.

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அறிவித்து இருந்தார். அதன் பின்னர், சில நாட்கள் கழித்து, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவதாக தான் கூறிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப் பெற்றார். ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த ரசிர்களுக்கு, அவரது இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்தது.

நடிகர் ரஜினிகாந்த் தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து சில நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

இச்சூழலில், நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது அரசியல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றார்.

கமல்ஹாசன் பிரச்சாரம்

கோவை, திருப்பூர், ஈரோட்டிலும் கடந்த சில நாட்கள் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கரை, பாலத்துறை பகுதிகளில் கடந்த 13-ம் தேதி கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அவரை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல்வேறு இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைத்து இருந்தனர். அதேசமயம், மதுக்கரை அருகேயுள்ள, பாலத்துறை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரச்சார வரவேற்புப் பலகை, மக்கள் நீதி மய்யக் கட்சியினரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பில் பதாகை

அதாவது, பிரச்சாரத்துக்கு வந்த தலைவர் கமல்ஹாசனை வரவேற்று, ரஜினி மக்கள் மன்றம் - பாலத்துறை சார்பில், அந்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நெருக்கமாக கைகோத்தபடி நின்றுள்ளனர். ‘நட்பின் இலக்கணமே வருக... வருக.. எனத் தொடங்கி அடுத்த 9 வரிக்கு இரு பொருட்களை ஒப்பிட்டு, வாசகங்கள் எழுதி, இறுதியில் உங்கள் இருவரிடமும் பிரிக்க முடியாதது இரண்டு நட்பு-நேசம்’ என முடிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் - பாலத்துறை எனக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதற்கு அருகே, திருமூர்த்தி என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால், ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்குத் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனரா என்ற குழப்பமும் அந்தப் பதாகையை பார்த்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள திருமூர்த்தியைத் தொடர்புகொண்டு கருத்து அறிய முயன்றோம். ஆனால், முடியவில்லை.

தனிப்பட்ட முறையில் வைத்துள்ளார்

இந்தப் பதாகை விவகாரம் தொடர்பாக, ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது,‘‘ தலைவர் ரஜினிகாந்த் எவ்வழியோ, அதே தான் எங்களது வழியும். அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும், பொதுச்சேவை தொடரும் என ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதேபோல், எந்தக் கட்சிக்கும், இயக்கத்துக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. பாலத்துறை அருகே, ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், நடிகர் கமல்ஹாசனுக்கு வரவேற்பு தெரிவித்து விளம்பரப் பதாகை வைத்திருப்பது எங்களுக்குத் தெரியாது. தலைமையின் உத்தரவும் கிடையாது. அதில் எங்களுக்குத் தொடர்பும் கிடையாது. சம்பந்தப்பட்ட நபர் தன்னிச்சையாக வைத்து இருக்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE