ஞானதேசிகன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

By செய்திப்பிரிவு

தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தி:

“மூத்த அரசியல்வாதியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (15.1.2021) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர். நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாகப் பழகக்கூடிய பண்பாளர்.

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ஞானதேசிகன்.

ஞானதேசிகன் மறைவு அவர் தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE