ஞானதேசிகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

ஞானதேசிகன் மறைவுக்கு ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன், ராமதாஸ், கே.பாலகிருஷ்ணன், டிடிவி தினகரன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் (72) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய ஞானதேசிகன் காங்கிரஸ் கட்சியில் மாணவர் காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டு படிப்படியாக வளர்ந்து அதன் மாநிலத் தலைவராக 2011-2014 வரை பணியாற்றினார். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். திமுக, அதிமுக என அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பழகியவர்.

அவரது மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், இயக்கத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகும். ஞானதேசிகன் மாணவர் பருவத்திலேயே காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் பெருந்தலைவரது இறுதி மூச்சுவரை அவருடன் சிறப்பாகக் களப்பணியாற்றியவர். காமராஜர் மறைவிற்குப் பிறகு மூப்பனார் தலைமையில் காங்கிரஸிலும், அதன்பிறகு தமிழ் மாநில காங்கிரஸிலும் தனது இறுதி மூச்சிவரை பெரும் பங்காற்றியவர்.

இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டவர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக டெல்லியில் குரல் கொடுத்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தலைமையிலே சிறப்பாகச் செயல்பட்டவர். தமிழகத்தினுடைய மூத்த வழக்கறிஞர். சிறந்த பண்பாளர், மாற்றுக் கட்சியினரோடும் நன்கு பழகக் கூடியவர். அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

மூப்பனாரின் நம்பிக்கைக்குரியவராக, அவர் வாழ்ந்த காலங்களில் அவர் எடுத்த முக்கிய முடிவுகளுக்குத் துணை நின்றவர். மூப்பனார் மறைந்த பிறகு என்னுடைய அரசியல் நலனிலும், மூப்பனார் குடும்பத்தினர் நலனிலும் அக்கறை கொண்டவராக தன்னுடைய இறுதி மூச்சுவரை செயல்பட்ட ஞானதேசிகன் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மறைந்த ஞானதேசிகனுக்கு தொடர்ந்து சிசிக்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், அனைவருக்கும், ஞானதேசிகன் உடல்நிலையில் மிகுந்த அக்கறையோடு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து மருத்துவனையோடு தொடர்புகொண்டு சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தமாகா சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், தமாகா தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், கனத்த இயத்தோடு என் ஆழந்த இரங்கலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்:

தமாகா துணைத் தலைவரும் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரைப் பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமைப் பருவம் முதல் காமராஜர் மீது பற்றுகொண்டு மாணவர் காங்கிரஸில் தம்மை இணைத்துக் கொண்டவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றவர்.

மூப்பனாரின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவரது தலைமையில் தீவிரமான அரசியல் பணிகளை மேற்கொண்டவர். சிறந்த வழக்கறிஞர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த பி.எஸ்.ஞானதேசிகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பி.எஸ்.ஞானதேசிகன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் அவர்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கத்தோடும் இன்முகத்தோடு பழகும் பண்பு கொண்ட அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரின் மறைவால் துயருற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும்,அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ். ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டிய, அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் தலைவர்களில் ஞானதேசிகனும் ஒருவர். அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். அரசியலைக் கடந்து என் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஞானதேசிகன் விரைவில் உடல்நலம் தேறி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது இறப்புச் செய்தியை எதிர்பார்க்கவில்லை.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர், எம்.பி. திருநாவுக்கரசர்:

அருமைச் சகோதரர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். ஞானதேசிகன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருந்து காங்கிரஸ் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர். தலைவர் மூப்பனாருடனும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராகவும் இருந்து சிறப்புடன் காங்கிரஸுக்குத் தொண்டு செய்தவர்.

எல்லோரிடத்திலும் பாசமாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர். அவருக்கு யாரும் எதிரிகளே கிடையாது. எல்லோரிடத்திலும் நட்பு பாராட்டக் கூடியவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். நல்லவர். நேர்மையானவர். சிறந்த வழக்கறிஞர். சிறந்த அரசியல் தலைவர் அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய மகன்கள், குடும்பத்தினருக்கும் மற்றும் ஜி.கே.வாசனுக்கும் அவரது இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் துயருடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்