அதிமுக அரசும் - மத்திய பாஜக அரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தின் நலன்களை அதானி குழுமத்திற்குத் தாரை வார்க்காமல் சூழலியல் நலனைப் பெரிதும் பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்குச் சுற்றுப்புறச்சூழல் அனுமதியோ அல்லது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எவ்வித நடவடிக்கைகளையுமோ எடுக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலை சிறிதுமின்றி - பொதுமக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினைத் துச்சமெனப் புறந்தள்ளி, அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குப் பொதுமக்களின் கருத்தினைக் கேட்கும் “பொது விசாரணை” ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனையும் - சுற்றுப்புறச் சூழலியல் பாதுகாப்பையும் அதிமுக அரசும் - மத்திய பாஜக அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு தாரை வார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சென்னை அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் 6,110 ஏக்கர் நிலங்களில் 2,291 ஏக்கரைப் பொதுமக்களிடமிருந்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமாக உள்ள தனியார் நிலம் 1,515 ஏக்கரையும் அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுக்க - அடாவடியாகப் பெற்றுக் கொடுக்க அதிகார துஷ்பிரயோகம் நடைபெறவிருக்கிறது.
ஆறு கிலோ மீட்டர் வரை கடல் பகுதியில் உள்ள 1,967 ஏக்கர் அளவிற்கான பரப்பளவை மணல் கொட்டி நிரப்பி - நிலத்தின் தன்மையை உருமாற்றி இப்படியொரு துறைமுக விரிவாக்கம் செய்வதை விடச் சுற்றுச் சூழலியலுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால்தான் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
துறைமுக விரிவாக்கம் நடைபெறவிருக்கும் இப்பகுதிதான் ஆழம் குறைவான கடல் பகுதி. இங்குதான் மீன்வளம் நிறைந்து காணப்படுகிறது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 82 மீனவ கிராமங்களில் உள்ள 1 லட்சம் மீனவர்கள் இந்த மீன்வளத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கூட மத்திய - மாநில அரசுகள் உணரத் தயாராக இல்லை.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர் நீர் ஏரியான பழவேற்காடு ஏரி காட்டுப்பள்ளி பகுதியில் உள்ளது. இந்தச் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இத்திட்டத்தால் அழிந்துபோகும் ஆபத்து கண் எதிரில் தெரிகிறது. காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கும் - பழவேற்காடு ஏரிக்கும் இடையே வெறும் 8 கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கிறது.
ஆகவே, இந்தத் துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் மூழ்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் 35 லட்சம் மக்களுக்கு ஏற்படும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தால் மீனவ கிராமங்கள் பல கடலுக்குள் போவதோடு - பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்தப் பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்து மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆரணி - கொற்றலை ஆற்றின் நன்னீர் பாதிக்கப்பட்டு - இந்த ஆறுகளே காணாமல் போகும் மிகப்பெரிய கேடு ஏற்படும். மீனவர்கள் மட்டுமின்றி - இந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தும். இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் எவ்விதத்திலும் மக்களுக்கோ - சுற்றுப்புறச் சூழலியலுக்கோ நண்பன் இல்லை.
மாறாகப் பரம விரோதியாகவே இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் அமைந்திருக்கிறது என்பதை அதிமுக அரசோ - அதானிக்காக வரிந்து கட்டிக்கொண்டு தமிழக மற்றும் ஆந்திர மீனவர்களை வஞ்சிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசோ யோசித்துக் கூடப் பார்க்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஆகவே 82 கிராமங்களில் வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வாழும் 35 லட்சம் மக்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி - தமிழக பொருளாதார நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கான “மக்கள் கருத்துக் கேட்பிற்கான” கூட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்தத் திட்டத்திற்குச் சுற்றுப்புறச் சூழல் அனுமதியோ அல்லது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எவ்வித நடவடிக்கைகளையுமோ முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago