இறை வணக்கம், விளையாட்டு வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் வரும் 19-ம் தேதி முதல் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. 12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் 8 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமா? என்ற கருத்துக்கேட்புக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 3 நாட்களுக்கு நடத்தப்பட்டது.
இதில், பெரும்பாலான பெற்றோர் மாணவர்களின் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகமும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தது.
அதன்படி, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19-ம் தேதி, முதல் கட்டமாக 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகச் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜன.13) நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
‘‘வரும் 19-ம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் அவர்களைப் பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக வீட்டுக்கு அனுப்பி, பெற்றோர் மூலம் மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் வெளியே வராமல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசர், நோய்த் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறையில் 6 அடி இடைவெளி விட்டு மாணவர்களை அமரவைக்க வேண்டும்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்னால் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றை மாணவர்களே வீட்டில் இருந்து கொண்டு வர ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் உணவு இடைவெளியின்போதும் மற்றும் நேரங்களில் ஒன்றுகூடுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
இறை வணக்கம், விளையாட்டு வகுப்பு, உடற்கல்வி உள்ளிட்டவற்றை நடத்தக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை மூட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை ஒவ்வொரு பள்ளியிலும் உறுதி செய்ய வேண்டும்’’.
இவ்வாறு குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர் அங்குலட்சுமி, கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago