சுற்றுலா நகரமான புதுச்சேரியின் முகமே தற்போது மாறியுள்ளது. நகரப் பகுதியில் முக்கியச் சாலைகள் அனைத்தும் இரும்பு வேலி கொண்ட தடுப்புகள், நவீன ஆயுதங்கள், மத்தியப் படையின் பாதுகாப்புடன் நம்மை வரவேற்கின்றன. மக்கள் நடமாட்டத்துக்குத் தடையுள்ளதால் அழகான சாலைகள் வெறிச்சோடிவிட்டன.
புதுச்சேரியில் அக்காலத்தில் வெள்ளையர் வாழ்ந்த பகுதியையும், தமிழர் வாழ்ந்த பகுதியையும் பிரிப்பது பெரிய வாய்க்கால். இதில் வெள்ளையர் வாழ்ந்த பகுதியை ஒயிட் டவுன் என்று இன்றும் அழைப்பது வழக்கம். இப்பகுதியில்தான் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ், சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், பிரெஞ்சு தூதரகம், தலைமை அஞ்சல் அலுவலகம் தொடங்கி முக்கிய அலுவலகங்கள், அதைத்தாண்டிச் சென்றால் கடற்கரை ஆகியவை அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒயிட் டவுனுக்குள் தமிழர்கள் வந்து செல்லப் பல கட்டுப்பாடுகள் இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு இவை அனைத்தும் மாறின.
தற்போது மீண்டும் பழங்காலத்துக்கு இப்பகுதி சென்றுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் இப்பகுதிச் சாலைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ஆளுநருக்கு எதிராகவும், சட்டப்பேரவையையும் முற்றுகையிடும் போராட்டங்கள் அதிகரித்ததால் முதலில் ஒயிட் டவுனில் பல சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது. கடந்த 8-ம் தேதி ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் முற்றுகையிட உள்ளதாக அறிவித்ததால் மத்தியப் பாதுகாப்புப் படையினர் புதுச்சேரிக்கு நவீன ஆயுதங்களுடன் வந்தனர். அதையடுத்து புதுச்சேரியே முற்றிலும் மாறிப்போனது. பின்னர் இப்போராட்டம் அண்ணா சிலையில் மூன்று நாட்கள் நடந்து முடிந்துவிட்டது.
தற்போது புதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள மூன்று அடுக்கைத் தாண்டி தற்போது 3 அடுக்குப் பாதுகாப்பு இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டப்பேரவைச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. முக்கியமாக ஒயிட் டவுனில் உள்ள மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் செல்ல பக்தர்கள் படும் பாடு மிகவும் அதிகம்.
இதுகுறித்து வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் கூறுகையில், "புதுச்சேரியில் சாலைகள் மிக அழகாக இருக்கும். தற்போது கடற்கரை அருகே நிறைவடையும் இச்சாலைகளில் பயணிப்போம். தற்போது கடற்கரை செல்லும் பல சாலைகளும் மூடிக் கிடக்கின்றன. தடுப்புகள், மத்திய துணை ராணுவப்படை ஆயுதங்கள், போலீஸார் எனச் சாலைகள் நிரம்பியிருக்கின்றன.
நகரப் பகுதிக்குள் பல சாலைகள் வெறிச்சோடியிருக்க அதையொட்டி உள்ள ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை ஆகியவற்றில் மக்கள் போக்குவரத்து நெரிசலில் நிரம்பித் தவித்துக்கொண்டே செல்வதைப் பார்க்கக் கொடுமையாக உள்ளது. மறுபுறம் இது "புதுச்சேரியா- காஷ்மீரா" என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டனர்.
நகரப் பகுதிக்குள் ராஜ்நிவாஸ்- சட்டப்பேரவை அருகே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு யாராலும் வரமுடியாத சூழலும் ஏற்பட்டுவிட்டதாக நகரப் பகுதியை ஒட்டியுள்ள குருசுக்குப்பம் மக்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.
"எளிதாக ஒரே சாலையில் அரசு மருத்துவமனைக்கு வருவோம். தற்போது பல கி.மீ. தொலைவு சுற்றி வரவேண்டியுள்ளது" என்கின்றனர் சோகத்துடன்.
சட்டப்பேரவைக்கு மக்கள் வந்து, தங்கள் குறைகளைத் தெரிவிக்கவோ, அதிகாரிகளைப் பார்க்க வருவதோ முற்றிலும் நின்று போய்விட்டது. குழந்தைகளும், நடைப் பிரியர்களும் மிகவும் நேசிக்கும் பாரதி பூங்கா காலவரையன்றி மூடப்பட்டுள்ளது. மக்களுக்கான சட்டப்பேரவை, ராஜ்நிவாஸ், தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள சாலைகள் மக்கள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடப்பதுதான் விநோதம்.
இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுவையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மத்திய பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகக் கிரண்பேடியின் தலையீட்டால்தான் இது நடந்துள்ளது. இன்றைய சூழலில் சட்டப்பேரவை, தலைமை தபால் நிலையம், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியரை அழைத்து 144 தடை பிறப்பிக்க அதிகாரம் அளித்தது யார்? தடை உத்தரவு, மத்திய பாதுகாப்புப் படையைத் திரும்பப் பெற அறிவுறுத்தியுள்ளேன். இன்று அவர் வாபஸ் பெறாவிட்டால் பேரிடர் ஆணையத் தலைவர் என்ற முறையில் அதற்கான கூட்டத்தைக் கூட்டி உத்தரவு பிறப்பிப்பேன்" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 secs ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago