ஸ்டாலினுக்கு கோவை மேற்கு மண்டலத்தில் பெருகும் ஆதரவு; வயிற்றெரிச்சலில் அதிமுகவினர்: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் குற்றமற்றவர் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, ஸ்டாலினைப் பதவி விலகச் சொல்வது என்பது, ஸ்டாலினுக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்துத் தாங்கிக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பிதற்ற ஆரம்பித்து விட்டார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்ட அறிக்கை:

''பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இப்பாலியல் சம்பவம் குறித்து உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிபிஐ கையிலெடுத்தது.

இதுவே ஆளும் எடப்பாடி அரசுக்கு சம்மட்டி அடி என்பதை எடப்பாடியும், பொள்ளாச்சி ஜெயராமனும் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும், சிபிஐ விசாரணையின் தொடக்கத்திலேயே ஆளும் அதிமுகவின் கோவை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருளானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐயால் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அருளானந்தம், அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை மாவட்ட அதிமுக பிரமுகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை உணர்த்த இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வெளிவந்ததை வேலுமணியோ, பொள்ளாச்சி ஜெயராமனோ மறுக்க முடியுமா?

பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறபோது "குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது", "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கிற பழமொழிக்கு ஏற்ப பொள்ளாச்சி ஜெயராமன் வாய்ச் சவடால் அளித்திருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினைப் பற்றி பொறுப்பற்ற முறையில் இவர் தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் (எழுத்துபூர்வமாக எந்தவிதமான) இந்த வழக்கு குறித்து எதுவும் பேசமாட்டேன் என்று எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சிபிஐ விசாரணை என்றவுடன் மிரண்டு போயிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தவறான தகவல்களைப் பொது வெளியில் பேசியிருக்கிறார். "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது போல" இவர் மகன் குற்றமற்றவர் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, ஸ்டாலினைப் பதவி விலகச் சொல்வது என்பது, ஸ்டாலினுக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாகப் பிதற்ற ஆரம்பித்துவிட்டார்.

சிபிஐ விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகுதான் யார் யார் இந்தக் கொடூரமான சம்பவத்தில் பங்கு பெற்றவர் என்பது வெளிச்சத்திற்கு வரும். சிபிஐ விசாரணையில் குற்றம் புரிந்தவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி திமுக சட்டத்துறை மூலமாக வழக்கை மேற்கொண்டு நடத்தி, உண்மையான குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்''.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்