சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லக்கூடிய இடங்களை அடையாளம் காட்டும் ஃபேஸ்புக் பக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை கோரும் நிறுவனமான சமூக நீதி மேம்பாட்டு மையம், சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்ல முடிகிற இடங்களைச் சுட்டிக்காட்டும் ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறது.

"சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளாகிய நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றால், பெரும்பாலான இடங்களில், எங்களுக்கென்று எந்த வசதியும் இருப்பதில்லை. நடைமுறை வாழ்க்கையில் எல்லோரையும்போல நாமும் வெளியே போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய இடம் என்று எதுவுமே இல்லை.

எங்கே செல்ல வேண்டுமானாலும், அங்கு சென்று பார்த்த பின்னர்தான், அங்கே எங்களுக்கான வசதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கோயில்களுக்கும், பூங்காக்களும் எங்களால் போக முடிவதே இல்லை. நாங்கள் செல்ல முடிகிற ஒரே இடம் கடற்கரையாகத்தான் இருக்கிறது. ஆனால் கடலன்னையைத் தரிசித்த நாட்கள் மிகவும் குறைவு" என்கிறார் மாற்றுத்திறனாளியான கவிதா.

இதை மனதில் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை கோரும் நிறுவனமான சமூக நீதி மேம்பாட்டு மையம், சென்னையில் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடிகிற இடங்களைச் சுட்டிக்காட்டும் ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறது.

அவர்கள், >'சென்னையில் அணுக முடிகிற இடங்கள்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள உணவு விடுதிகள், கடைகள், ஏடிஎம்கள், தியேட்டர்கள் ஆகியவற்றின் முகவரிகள், புகைப்படங்களோடு பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இதில் சி.பி. ராமசாமி சாலை மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள பாரதிதாசன் சாலையில் உள்ள அம்மா உணவகங்களும் அடங்கும்.

தரைதளம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது, கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறதா, சக்கர நாற்காலிப் பயனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள் உள்ளதா, மாற்றுத்திறனாளிக்கு உதவ சிறப்பு பணியாளர்கள் இருக்கிறார்களா என்பது குறித்த தகவல்களும் அதில் பதிவேற்றப்படுகின்றன.

இது குறித்துப் பேசிய சமூக நீதி மேம்பாட்டு மைய நிர்வாகி, "மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச விதிகளைப் பின்பற்றி, நிறுவனங்கள் தங்கள் இடங்களை 100 சதவிகிதம் சரியாக அமைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி செய்யவேண்டும்.

நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த ஃபேஸ்புக் பக்கம், சென்னையில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறிய முயற்சியாக இருக்கும்" என்றார்.

இந்த ஃபேஸ்புக் பக்கத்துக்கு நீங்களும் பங்களிக்கலாம். நீங்கள் செல்லும் வழியில் மாற்றுத் திறனாளிகளால் பயன்படுத்த முடிகிற உணவகங்கள், ஏடிஎம்கள், மருத்துவமனைகளை பார்த்தால், அதைப் புகைப்படம் எடுத்து, பெயர் மற்றும் முகவரியை அவர்களின் >முகநூல் பக்கத்து இன்பாக்ஸுக்கு அனுப்பலாம். அல்லது toequalscpsj@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் பண்ணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE