தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு: அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

By ந. சரவணன்

தமிழகத்திலேயே முதல்முறையாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜன.11) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாநிலத் தொழிலாளர் ஆணையர் வள்ளலார் திட்ட விளக்கவுரையாற்றினார். தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினர்.

இதையடுத்து, அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ''திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30,290 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், 1,728 ஓய்வுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கும்ம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல்முறையாக இந்தத் திட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை 98.45 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 95 சதவீதம் பேருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் பேசும்போது, ''கட்டுமானத் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ பாசிப்பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

1994-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தொழிலாளர் நலவாரியம் தொடங்கப்பட்டது. தமிழத்தில் 17 நல வாரியங்கள் உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் காயம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தொழிலாளர்களின் குடும்ப வாரிசுகள் 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றால் ரூ.1,000, 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றால் ரூ.1,500 வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு ரூ.94.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் செந்தில்குமார், தொழிலாளர் கூடுதல் இணை ஆணையர் யாஸ்மின்பேகம், வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி, மாநிலக் கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பழனி, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்டக் கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்