விளாத்திகுளத்தில் தொடர் மழையால் பயிர்கள் அழுகி சேதம்: இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மனு

By ரெ.ஜாய்சன்

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றாங்கரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

விவசாயிகள் மனு:

விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் த.ரகுராமர் தலைமையில் விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓ.துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், அ.கந்தசாமிபுரம், தொப்பம்பட்டி, கல்குமி, ஆற்றங்கரை ஆகிய ஊர்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்து வரும் பெருமழையால் சுமார் 800 ஹெக்டேர் பரப்பில் உளுந்து பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கம்பு போன்ற பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.

எனவே, இந்த கிராமங்களில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமையில் துணைத் தலைவர் கார்த்திக், துணைச் செயலாளர் மாரிச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:

2017- 2018-ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு இதுவரை அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால், அதற்கு பிறகு படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே, 2017- 2018-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் உடனே மடிக்கணினி வழங்க வேண்டும். ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு 2020- 2021-ம் ஆண்டுக்கான இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதிரியார் சமுதாயம்:

வாதிரியார் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரம் வாதிரியார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: வாதிரியார் சாதி பெயரை புதிய பெயர் மாற்றம் செய்யக் கூடாது. வாதிரியார் சாதிச் சான்றிதழை மாற்று சமுதாயத்துக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் வழங்கப்படும் வாதிரியார் சாதி சாண்றிதழ்களில் 'வதிரியன்' என தவறாக பதிவிடப்பட்டுள்ளதை திருத்தி 'வாதிரியான்' என சாரியாக பதிவிட வேண்டும். இந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வில்லை எனில் வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஐ.பாலகிருஷ்ணன் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் அளித்த மனு: நான் உடன்குடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி கடந்த 30.05.2019-ல் ஓய்வு பெற்றேன்.

நான் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித ஓய்வூதிய பலன்களும் இதுவரை கிடைக்கவில்லை. எனது மீது எந்தவித குற்றச்சாட்டும் நிலுவையில் இல்லாத போதும், எனக்கு பணி விடுவிப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் இருந்து எனது வீட்டிலேயே அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளேன் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை வசதி:

கடம்பூர் அருகேயுள்ள சங்கராப்பேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனு விபரம்: எங்கள் ஊரில் இருந்து கடம்பூர் செல்லும் பாதையில் உள்ள ரயில்வே கீழ்மட்ட பாலத்தில் மழைநீர் தேங்கி, அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அருகேயுள்ள குண்டும், குழியுமான சாலையை தற்காலிகமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே, எங்கள் ஊரில் இருந்து கடம்பூர் செல்ல ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீடு

கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி அருகேயுள்ள குதிரைகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் குருமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் தனித்தனியாக ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 2019- 2020-ம் ஆண்டில் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தோம். பக்கத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ள நிலையில் எங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விரைவாக பயிர் காப்பீட்டு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்