பொங்கல் விழாவுக்காக அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை வழங்கி இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் திட்டத்தைத் தொடங்கியவர் தலைவர் கருணாநிதிதான் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
''நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
உலகம் முழுவதும் நீண்ட காலமாகக் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை, தமிழக மக்கள் நம்பிக்கையுடன் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்குக் காரணம், தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகி, உதயசூரியன் ஆண்டாக இது அமையும் என்பதுதான்.
» என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» புதிய மைல்கல்லை எட்டிய புஜாரா: 11-வது இந்தியர் எனும் சாதனை
உலகத்தாருடன் இணைந்து ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுகிற அதேவேளையில், உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்பை - அதன் பண்பாட்டு அடையாளங்களை - உழைக்கும் மக்களான உண்மையான விவசாயிகளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக - தமிழர் திருநாளாக - பொங்கல் விழாவினைக் கொண்டாடுவதைப் பண்பாட்டு மறுமலர்ச்சியாகக் கட்டமைத்த வரலாற்றுச் சிறப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு.
தமிழர்கள் வாழ்வில் அந்நிய ஆதிக்கம் - ஆரியத்தின் தாக்கம் - வடமொழிக் கலப்பு எல்லாம் மிதமிஞ்சியிருப்பதையும், தமிழர்கள் தங்களுக்கே சொந்தமான பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமையை அறிய முடியாத வகையில் பிற கலாச்சாரங்கள் ஊடுருவியிருப்பதையும் ஆராய்ந்து அறிந்து மக்களிடம் எடுத்துச் சொன்னது திராவிட இயக்கம்.
பெரியாரும், அண்ணாவும், தலைவர் கருணாநிதியும் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் அந்நிய - ஆரிய - வடமொழிப் பண்பாட்டினை எதிர்த்து, தமிழர்களின் தனித்த அடையாளமாக விளங்கும் பொங்கல் திருநாளை நமக்கான விழாவாக - தமிழர் திருநாளாக - தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதை மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மேற்கொண்டதுடன், திராவிட இயக்கத்தின் சார்பில், பொங்கல் விழாக்கள் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
உழைப்பின் மேன்மையைப் போற்றி - அந்த உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை, உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாளே தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளாகும். உலகின் மூத்த குடியான தமிழ்க் குடிக்கேயுரிய தனித்துவமான இந்தப் பண்பாடு மறுமலர்ச்சி காண வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன், தமிழர் திருநாளாகப் பொங்கல் விழா ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடும் வழக்கம் கடந்த முக்கால் நூற்றாண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மதச் சடங்குகள் இல்லை, மந்திரங்கள் இல்லை, அவரவர் வழிபடும் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு அதற்கும் மேலாக உலகிற்கே வாழ்வளிக்கும் சூரியனை வணங்கி உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளையும் மறக்காமல் அவற்றுக்கு நன்றி பாராட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாள் போலச் சிறப்பு மிக்க இன்னொரு விழாவை - பண்பாடு போற்றும் பண்டிகையைக் காண முடியாது.
அதனால்தான் திமுகவினர், அண்ணா காலம் தொட்டே, பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக - தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதி தலைமையில் எத்தனையெத்தனையோ பொங்கல் விழா கவியரங்கங்கள் - பட்டிமன்றங்கள் என இன்பத் தமிழ் பொங்கியது. தமிழர் பண்பாட்டு அடையாளமான வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்காலத்திற்கேற்ற விளையாட்டுகள் - வேடிக்கைகள் ஆகியவையும் பொங்கல் திருநாளையொட்டி மூன்று நாட்கள் கொண்டாடும் வழக்கமும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெருகியது.
கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்காலத்தில், பொங்கல் விழாவுடன் திருவள்ளுவர் நாளையும் இணைத்துக் கொண்டாடப்பட்டதுடன், தமிழர்களின் ஆண்டுக் கணக்காகத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கும், மறைமலையடிகள், திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட பலநூறு தமிழறிஞர்களின் ஆய்வுப்பூர்வமான விருப்பத்தின்படி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற காலக் கணக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொங்கல் விழாவுக்காக அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை வழங்கி இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் திட்டத்தைத் தொடங்கியவரும் தலைவர் கருணாநிதிதான்.
ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளைப் போற்றிப் பாராட்டி, பொதுமக்களின் பங்கேற்புடன் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது திமுக.
சனாதனப் பிரிவினைகளை அகற்றி - சமூக நீதியைப் போற்றி - மதவெறிக்கு உலை வைத்து - மதநல்லிணக்கம் எனும் மகிழ்ச்சி அனைத்து மக்களின் மனதிலும் பொங்கும் வகையில் ‘சமத்துவப் பொங்கல்’ விழாக்களை உடன்பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவது வழக்கம். அதே உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவைச் சமத்துவப் பொங்கல் வைத்து இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனவரி 13ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும், 14ஆம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாக்களில் உங்களில் ஒருவனான நானும் பங்கேற்கிறேன். மார்கழித் திங்களின் கடைசி நாளிலும் - தை முதல் நாளிலும் தமிழகத்தில் எங்கெங்கும் பொங்கட்டும் சமத்துவப் பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில் சமத்துவப் பொங்கல் சிறக்கட்டும்.
பொங்கல் நம் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா, திராவிட இயக்கம் தமிழகமெங்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய விழா, காலந்தோறும் வெவ்வேறு வேடம் போட்டு வரும் பண்பாட்டுப் படையெடுப்புகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு துரத்தி அடித்து,தமிழ்ப் பெருமை காத்திடும் விழா! மகிழ்ச்சி பொங்கிடும் விழா! வெற்றியின் விளைச்சலுக்கான விழா!
தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவோம்! மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்! அவர்களின் வாழ்வின் விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago