விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் 

By செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கு விரோதமாக பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (10.1.2021) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி, விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும், அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் - 1 : தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி, பாராட்டு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கே.எஸ்.அழகிரி ஆகியோரின் பரிந்துரையின்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குழுக்கள் நியமிக்கப்பட்டதை இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் நினைவுகூர விரும்புகிறது.

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், தமிழகத்தில் நீண்டகாலமாக ஆட்சியில் இல்லாத காரணத்தால் அரசு பதவிகள் வழங்க இயலாத நிலையில் அதிக அளவிலான நிர்வாகிகளை நியமித்து காங்கிரஸ் கட்சியினரை அரவணைத்து ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பை இக்கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அனைவரும் பங்கேற்கிற அளவில் அமைப்புகள் இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கக் கூடியதாகும். அந்த வகையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கருத்தொற்றுமை மூலம் நிர்வாகிகளை நியமிப்பதில் மிகச் சிறப்பாக ஜனநாயக முறையில் செயல்பட்டு நியமனங்களைச் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அதற்குப் பெரும் துணையாக இருந்த அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவெல்லபிரசாத் ஆகியோரையும் இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது, போற்றுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதலை வழங்கிய சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, தமிழக காங்கிரஸில் நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் 100 நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு நமது அமைப்புகள் போர்ப் படையை போல வீரம் செறிந்த வகையில் துடிப்புமிக்க செயல்பாடுகளோடு வரும் தேர்தலை சந்திக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய பெருமைகளை மீட்டெடுக்கிற வகையிலும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிலவிய மகோன்னத நிலையை அடைவதற்கும் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கொள்கைப் பற்றுடனும், ஒற்றுமையுடனும், கட்டுப்பாடுடனும் செயல்படுவதென இக்கூட்டத்தின் மூலம் சூளுரை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறது.

கோப்புப் படம்.

தீர்மானம் - 2 : விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும்

விவசாயிகளோ, விவசாய சங்கங்களோ, எதிர்க்கட்சிகளோ எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் மீது திணித்ததை எதிர்த்து கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஏழுகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இப்போராட்டத்தின் காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்குப் பிறகும் மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இல்லை.

தலைநகர் டெல்லியில் நடைபெறுகிற விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் மட்டுமே பங்கேற்பதாக பாஜக அரசு சிறுமைப்படுத்திப் பேசி வருகிறது. ஆனால், நாடு முழுவதிலுமுள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் பங்கேற்கிற நாடு தழுவிய போராட்டமாகத்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற பாரத் பந்த்தில் 25 கோடி மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் மாபெரும் விவசாயிகள் இயக்கமாக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிற விவசாயப் பெருங்குடி மக்களை இக்கூட்டம் நெஞ்சாரப் பாராட்டுகிறது.

விவசாயிகளுக்கு விரோதமாக பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த விவசாயத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயச் சங்கங்களோடு கலந்து பேசி, திருத்தப்பட்ட புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறுகிறவரை விவசாயிகளின் போராட்டம் ஓயாது.

தமிழகத்தில், மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திருவண்ணாமலை, தேனி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் மாபெரும் விவசாயிகள் சங்கமத்தை தமிழக காங்கிரஸ் நடத்தியிருக்கிறது. அதேபோல, இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏர் கலப்பை பேரணி சிறப்பான முறையில் நடத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் போராடுகிற விவசாயிகளுக்கு வலிமை கூட்டுகிற வகையில், தமிழக விவசாயிகளின் குரலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், நாட்டு மக்கள் பாராட்டுகிற வகையில் செயல்பட்டதற்கு இக்கூட்டம் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன்மூலம், மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் தமிழக காங்கிரஸ் முன்னணிப் பங்கு வகிப்பதை இக்கூட்டம் பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, விவசாயிகளின் விரோத வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிரமான பிரச்சாரங்களைக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 3 : காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கின்ற வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்

நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளில் ஊடகத்துறையின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் பங்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வகுப்புவாத பாஜக அவதூறு செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது.

இதை நிறைவேற்றுகிற வகையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் அச்சு மற்றும் காட்சி ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றின் மூலம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வது மிக மிக அவசியமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் கட்டுப்பாடுகளை மீறுகிற வகையில் ஊடகத்தின் மூலமாக காங்கிரஸின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்கிற போக்கு பரவலாக வளர்ந்து வருகிறது. உடனடியாக இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்