20 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் நகரின் மைய பகுதியில் பேருந்து நிலையம் அமைந்திருந்தது. உள்ளூர் பேருந்து நிலையம் என்றும் திருவள்ளுவர் பேருந்து நிலையம் என்றும் இரு பிரிவுகளாக இது இயங்கியது. நகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது.
இதற்கிடையில், 1991ம் ஆண்டு தொடக்கத்தில் அப்போது விழுப்புரம் எம்எல்ஏ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, “விழுப்புரம் பூந்தோட்டம் ஏரியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்” என அறிவித்தார். இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விழுப்புரம் தனி மாவட்டமாக உருவானது. 1994 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூந்தோட்டம் ஏரியின் அருகிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. “இது பேருந்து நிலைய விஸ்தரிப்புக்காக ஒதுக்கப்பட்ட இடம்” எனும் அறிவிப்பு பலகை மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்டது.
இந்நிலையில் 1994 -ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடமாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பூந்தோட்டம் ஏரி தேர்வு செய்யப்பட்டது. பூந்தோட்டம் ஏரியில் இருந்து 15 ஏக்கர் பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டப் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கான அரசாணை 7.11.1994 அன்று வெளியிடப்பட்டது.
ஆனாலும் பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. மீண்டும் 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 8.6.1998ம் தேதி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி நாட்டினார். பணிகள் வேகமாக நடந்து 9.6.2000 ம் தேதி நவீன புதிய பேருந்து நிலையத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.
”ப” வடிவிலான இப்பேருந்து நிலையம் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு அதாவது எதிர்முனையில் உள்ள பகுதிக்கு மழையில் நனையாமல் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் பேருந்து நிலையத்திற்குள் வாகனம் நிறுத்துமிடம் முதலில் அமைய பெற்றதும் இங்குதான்.சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்து பெரிய பேருந்து நிலையம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பேருந்து நிலையம் தற்போது பராமரிப்பின்றி இருக்கிறது. வந்து செல்லும் பயணிகள் வெறுத்து போகும் அளவுக்கு உள்ளது. பயணிகளுக்கான இலவச கழிவறைகள் 4 இருந்தாலும், அவைகளை நகராட்சி முறையாக பராமரிப் பதில்லை. கட்டணக் கழிவறையில் அனைத்து ஊர்களைப் போலவே கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்காக இரு பாலருக்கும் முறையே 2 கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அதில், தலா ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, முறையற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவோர் தொல்லை அதிகமாக உள்ளது. பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்த தனியாக பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் நியமிக்கவில்லை. இலவச குடிநீர் குழாய்கள் இருந்தாலும் அவைகளில் தண்ணீர் வருவதில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளால் கூடுதல் அசுத்தம் என குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பேருந்து நிலையம் திட்டமிட்டு தெளிவாக கட்டப்பட்டாலும் கட்டப்பட்ட இடம் ஏரி என்பதால், லேசான மழை பெய்தாலே பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாகி விட்டது. அட்டகாசமான பேருந்து நிலையத்தை அவலட்சணமாக்கியுள்ளது நகராட்சி நிர்வாகம் என்பதே வலிக்கும் உண்மை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago