பள்ளியை இழுத்து மூடி இடத்தை விற்க முயற்சி; உயர் நீதிமன்றம் தடை: அரசுக்கு நோட்டீஸ்

300 மாணவர்களுடன் இயங்கும் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடி, கட்டிடத்தை விற்க முயலும் தனியார் அறக்கட்டளையின் முயற்சிக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், அதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர், பாரதி நகரில், 53 ஆண்டுகளாக இயங்கி வரும் தேவி கருமாரி அம்மன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, பிரமோத் மற்றும் சிவபிரசாத் ஆகியோரால் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது.

அதில் ஏழை மற்றும் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி திறக்கப்படாமல் இருந்த நிலையில் பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு, வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் பள்ளி நிர்வாகிகளின் நடவடிக்கையை எதிர்த்து சந்திரசேகர், அப்துல் ரசாக், சுரேகா உள்ளிட்ட பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையின் ஒப்புதல் பெறாமலும், மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமலும் பள்ளி மூடப்பட்டு, இடிக்கப்படுவது தொடர்பாக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டி.பிரசன்னா, 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால், பள்ளிக் கட்டிடத்தை இடிப்பதற்கும், இடத்தை விற்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்று, பள்ளிக் கட்டிடத்தை இடிக்கவும், இடத்தை விற்பனை செய்யவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை, திருவள்ளூர் மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சியர், பள்ளியின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE