புதுச்சேரி அரசை முடக்கும் செயலில் ஈடுபடும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று (ஜனவரி 9) சென்னையில் நடைபெற்று வருகிறது, இதில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனநாயகம் காக்க துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப் பெறுக
''புதுச்சேரியில் நேற்று முதல் (8/1/2021) நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, சுயேச்சையாகச் செயல்பட விடாமல் தடுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்குத்தான் அதிகாரம் என்ற ஜனநாயக, அரசியல் சட்ட மாண்புகளுக்கு எதிராக, இதுகுறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் துணைநிலை ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டுப் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைப் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைப்படுத்தி வருகிறார். மாநில அரசின் முடிவான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.
புதுச்சேரி மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கவும், பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக் கட்டி நிரந்தரமாக ரேஷன் கடைகளை மூடிடவும் முனைப்புடன் செயல்படுகிறார். அரசு அனுப்பிய இலவச அரிசி வழங்கல் உள்பட 30க்கும் மேற்பட்ட கோப்புகளை முடக்கியுள்ளார்.
இவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்புகள் புதுச்சேரியில் கால் பதிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார் ஆளுநர். நியமன எம்எல்ஏ விவகாரத்தில் இது வெளிப்படையாகத் தெரிந்தது.
தொடர் போராட்டம்
கடந்த வாரத்தில் தனக்கும், தனது அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டி துணை ராணுவப்படையைப் பெருமளவில் ராஜ்பவன், கடற்கரை பகுதி மற்றும் மக்கள் நடமாடக்கூடிய முக்கியமான பகுதிகளில் குவித்துள்ளார். மாநில அரசைக் கலந்தாலோசிக்காத, தன்னிச்சையான ஆளுநரின் இந்தச் செயல்பாடு அவரது அதிகார எல்லையை மீறுவதாக உள்ளது.
புதுச்சேரியில் முக்கிய இடங்களில் இன்றும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படை நிற்க வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மக்களின் இயல்பான நடமாட்டம், மற்றும் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கின்ற பின்னணியில் இதுபோன்ற செயற்கையான பதற்றத்தை உருவாக்கி அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்குவது அவரது நோக்கமாக இருக்கிறது.
இந்த அதிகார மீறலை எதிர்த்து ஜனநாயகரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான அனைத்துக் கட்சிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டதை மறுத்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியரை நிர்பந்தித்து 144 தடை உத்தரவையும் போட வைத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், மாற்று இடத்தில் அரசுத்துறையின் அனுமதியுடன் அமைதியான முறையில் அண்ணா சிலை அருகே நேற்று முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மக்களின் இந்தப் போராட்டத்திற்கு மாநில முதல்வரே தலைமையேற்று நடத்தி வருகிறார். இப்போராட்டத்தில் பெருமளவு மக்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். நேற்று தொடங்கிய இப்போராட்டம் தற்போது மேலும் தீவிரமடைந்து வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் வேறு மாநிலத்துடன் இணைக்கப்பட்டோ அல்லது மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஜனநாயகமற்ற முறையில் எடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆளுநரின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநரின் தூண்டுதலால் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மதிக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த விடாமல் தடுக்கின்ற, பாஜகவின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுகிற கையாளாகச் செயல்படுகிற துணைநிலை ஆளுநரை உடனடியாக மத்திய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்”.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago