முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஈபிஎஸ்-ஓபிஎஸ், ஸ்டாலின், தினகரன் கண்டனம்

By செய்திப்பிரிவு

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2019-ம் ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நினைவுத்தூண் நேற்று இரவு (ஜன. 08) இலங்கை அரசு அதிகாரிகளால் திடீரென இடிக்கப்பட்டது.

இதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலகத் தமிழர்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதகச் செயலுக்கும் அதற்குத் துணைபோன யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர்

இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கெனவே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பதை, பிரதமர் மோடி கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது.

தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்துகொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்