மாற்றுத்திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசுப் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''1998ஆம் ஆண்டு, இந்தியா முழுமையும், அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்சா அபியான் இப்போது சமகரா சிக்சா), மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுகின்றது. இதற்கான செலவுத் தொகையில் 60 விழுக்காடு மத்திய அரசு, 40 விழுக்காடு மாநில அரசு வழங்குகின்றது.
இந்தத் திட்டத்தின்படி, கிராமம் மற்றும் நகரங்களில் வீடு வீடாகச் சென்று, மாற்றுத் திறனாளி மாணவர்களைக் கண்டறிந்து, தேசிய அடையாள அட்டை பெற்றுத்தருதல், அவர்களைப் பள்ளியில் சேர்த்து சிறப்புப் பயிற்சி, வாழ்வியல், தொழிற் கல்வி அளிப்பது மற்றும் வீடு சார்ந்த பயிற்சிகளுடன் அவர்களுக்குத் தேவையான கருவிகளைப் பெற்றுத் தருதல் ஆகிய பணிகளுக்கக, சிறப்புப் பயிற்றுநர்களைப் (Special Educators) பணியில் அமர்த்தி இருக்கின்றார்கள். அந்த வகையில், நாடு முழுமையும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். கேரளா, ஒடிசா, பிஹார், சண்டிகர், காஷ்மீர், அந்தமான் ஆகிய அரசுகள், அவர்களைப் பணி நிரந்தரம் செய்துள்ளன.
தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பணியில், 1998 முதல் தமிழ்நாட்டில், சுமார் 3000 பேர் முழு நேரப் பணி செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு, 2002ஆம் ஆண்டு முதல், மாதம் 4500 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் ஊதியமாக, தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இப்போது மாதம் 16,000 ரூபாய் வழங்கி வருகின்றார்கள். இந்தப் பணி செய்கின்ற மகளிருக்கு, பேறு கால விடுமுறை, மருத்துவ வசதிகள் எதுவும் கிடையாது.
விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலையில், ஊதியம் கிடையாது. அடையாள அட்டையும் கிடையாது. ஆனால் இந்தத் திட்டத்தில் பணிபுரியும் 80 விழுக்காட்டினர் பெண்கள்தான்.
இவர்கள் அனைவரும், அரசு உரிமம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் படித்துப் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள்.
சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும், தமிழகம் முழுமையும் 15 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அங்கே படித்துப் பட்டம் பெற்று, 1998ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர்கள் அனைவரும், தற்போது 40 வயது கடந்தவர்களாக இருக்கின்றார்கள். இனி இவர்களுக்கு வேறு பணி வாய்ப்புகள் கிடைக்க வழி இல்லை. எஞ்சிய காலத்திலும் அவர்களுடைய வாழ்க்கை, கேள்விக்குறியாக இருக்கின்றது. அவர்கள் பலமுறை முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்து இருக்கின்றார்கள்.
எனவே, அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, அரசுப் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்''.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago