தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பதை ரத்து செய்வதா, வேண்டாமா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முடிவைத் தமிழக முதல்வர் அறிவிப்பார் எனத் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
''தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு உடனடியாகத் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. கரோனா ஊரடங்கு நிலவி வந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் தியேட்டர், வணிக வளாகம், பூங்கா உள்ளிட்ட அனைத்துக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 50 சதவீத இருக்கையுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே தமிழகத்தில் தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் கரோனாவும் தமிழகத்தில் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு தற்போது தமிழகத்தில் குறைவாக இருக்கின்ற நிலையில் திரைத்துறையினர், நடிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பண்டிகைக் காலத்தையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அந்த அடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டு கடிதம் எழுதியுள்ளது. மற்றபடி அனுமதி அளித்ததற்காகத் தடையோ, எச்சரிக்கையோ விதிக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவை விரைவில் அறிவிப்பார்.
பொள்ளாச்சி சம்பவத்தைப் பொறுத்தவரையில் தமிழக அரசுதான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஒரு சம்பவம் நிகழ்ந்த நேரத்திலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக அரசுதான். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் அவர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கி, விசாரணையில் எந்தவிதக் குறுக்கீடும் செய்யாமல் இருந்தது இந்த அரசுதான்.
கனிமொழி எம்.பி. சொல்வதுபோல அதிமுக அரசு யாருக்கும் பாரபட்சமாக நடந்தது கிடையாது. திமுகவும், கனிமொழியும்தான் பாரபட்சமாக நடந்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு பெண்ணை, பெண் என்றும் பாராமல் அங்கிருந்து வெளியேற்றச் சொல்லியுள்ளார். குண்டர்களை வைத்து மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒரு பெண்ணாகக் கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தால், அவர் சொல்வதை நியாயமானதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர் அதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எனவே கனிமொழி எம்.பி.யும், திமுகவும்தான் பாரபட்சமாக நடந்து வருகின்றனர்''.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
16 hours ago