தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி என, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இரண்டு நாள் பிரச்சாரப் பயணத்தை இன்று (ஜன.08) தொடங்கினார்.
இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடியபோது அவர் பேசியதாவது:
"கடந்த நவம்பர் 20-ம் தேதி எனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி பேசி வருகிறேன். இந்தப் பயணம் தொடங்கியபோது போலீஸார் பல்வேறு நிபந்தனைகளைக் கூறி என்னைக் கைது செய்து, இரவில் விடுவித்தார்கள். இரவிலும் எனது பிரச்சாரத்தை மேற்கொண்டேன். திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் இளைஞரணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நான் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றபோது 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். தற்போது 4.50 லட்சம் பேர் நிர்வாகிகளாக உள்ளார்கள்.
பதவி கிடைத்து விட்டது என்று 'சும்மா' இருக்கக்கூடாது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. இளைஞர்களின் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. நீங்களும் அதனை உறுதியோடு ஏற்றுச் செயல்பட வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக திமுகவை மாற்றியதற்கு நீங்கள்தான் காரணம். அதேபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்".
இவ்வாறு உதயநிதி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழகம் எதிரே தொழிலாளர் முன்னேற்றக் கழக போக்குவரத்து தொழிலாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில், கடந்த 1999-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது முதன்முதலில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பென்ஷன் நிலுவை கொடுக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. விடுமுறை எடுக்காமல் உழைத்த நாட்களுக்கான உரிய பணம் தரப்படாமல் வருகைப் பதிவேட்டில் குளறுபடி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
பின்னர் அவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அவர் கூடியிருந்த பொதுமக்களிடம் பேசுகையில், "இந்த அரசு மக்களின் வரிப்பணத்தில் தினமும் சாதனை விளம்பரம் அளித்துவருகிறது. நான் பிரச்சாரம் செய்யும்போது வன்முறையைத் தூண்டுவதாக வழக்குத் தொடர்ந்தார்கள். நேற்று தகாத முறையில் பேசுவதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். நான் தகாத முறையில் பேசுகிறேனா?
முதல்வர் பழனிசாமி படிப்படியாக வளர்ந்ததாகச் சொல்கிறார். தற்போது முதல்வருக்கு 2 பிரச்சினைகள் உள்ளன. சசிகலா 27-ம் தேதி வெளியே வருகிறார். உடனே அவர் காலில் முதல்வர் விழுந்துவிடுவார். அடுத்த பிரச்சினையை பிரதமருக்கும், இவருக்கும் பொதுமக்களான நீங்கள் வைக்க உள்ளீர்கள். இந்தியாவில் முதன்மை மாநிலமாம் தமிழகம். ஊழலில் முதல் மாநிலம். ரூ.6,000 கோடியை முதல்வர் உறவினர் ஊழல் செய்துள்ளார் என்றால், அவர் எனக்கு சம்பந்திதான், உறவினர் இல்லை என்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டில் நிரூபிக்கப்பட்ட முதல் முதல்வர் ஜெயலலிதா ஆவார். வாக்கு கேட்டுவரும் அதிமுகவினரிடம் ஜெயலலிதா எப்படி இறந்தார் எனக் கேளுங்கள். ஜெயலலிதாவை 90 நாட்கள் மருத்துவமனையில் அடைத்து வைத்தார்கள். ஜெயலலிதா இறக்கும்போது முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து தூங்கிவிட்டு, தியானம் செய்ததாகக் கூறியவர், தற்போது விசாரணை கமிஷன் 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மறந்துவிட்டேன் என்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புயல், வறட்சி என பெரிய பாதிப்பால் முதல்வர் மத்திய அரசிடம் ரூ.10 ஆயிரத்து 500 கோடி இழப்பீடு கேட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அந்த கோபத்தால் ரூ.1,500 மட்டுமே மத்திய அரசு வழங்கியது. இதையெல்லாம் உணர்ந்து திமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago