பொள்ளாச்சி பாலியல் வழக்கு; குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படக் கூடாது: கி.வீரமணி

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எஞ்சிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜன. 07) வெளியிட்ட அறிக்கை:

"நாட்டையே மிகப்பெரிய அதிர்ச்சிக்கும், அவமானத்திற்கும் ஆளாக்கிய பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்டவர்களில் சிபிஐ, மேலும் மூன்று அதிமுக - ஆளுங்கட்சி பிரமுகர்களைக் கைது செய்துள்ளதன் மூலம், அதிமுகவின் பிரச்சார முகமூடி கழன்று விழுந்துவிட்டது!

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, பணமும் பறித்து, அப்பாவி பெண்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வந்த கொடுமை தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத, நடந்திராத மிகப்பெரிய தலைக்குனிவுக்கான இடம்.

எங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் சம்பந்தமில்லை என அதிமுக பிரமுகர்கள், முக்கியப் பதவி வகிக்கும் சிலர் கூறியதும், புரட்டு என்று இதன்மூலம் அம்பலமாகிவிட்டது!

அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று அதிமுக பிரமுகர்கள், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி என்ற ஆர்எஸ்எஸ் தலைவருடன், தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியானதால், பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது!

சுதந்திரமாக இயங்க முடியாததால், தமிழ்நாட்டுக் காவல்துறை இதில் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற நமக்கே கூட அனுமதியளிக்க கோவை மாவட்ட ஆட்சி நிர்வாகம் மறுத்தது இங்கு நினைவூட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கோவை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

மேலும் மூன்று பேர் கைது!

இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய மேலும் மூன்று பேரை சிபிஐ நேற்று முன்தினம் (ஜன. 5) கைது செய்தது.

ஆளும் கட்சி அமைச்சர், பாஜக முக்கியப் பிரமுகருக்கு நெருக்கமானவர்கள்!

இவர்கள் மூவரையும் நேற்று (ஜன.06) கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி நந்தினிதேவி விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஜனவரி 30ஆம் தேதிவரையில் இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்!

இந்த அநீதி கண்டு நாடே கொதித்துக் கிளம்பியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள், ஆளும் கட்சி அமைச்சர், பாஜக முக்கியப் பிரமுகருக்கு நெருக்கமானவர்கள் என்பதால், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது!

தமிழ்நாட்டின் நற்பெயருக்கு இதைவிட பெரும் தலைக்குனிவும், அவமானமும் வேறு உண்டா? இதைத் தோண்டத் தோண்ட புதுப்புது கொடுமைகள், புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் போல, கிடைக்கிறது என்பது மக்களுக்கு மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.

வல்லுறவும், வன்நெஞ்சமும் கூட்டணி சேர்ந்த கதை

நம் நாட்டில் பல குடும்பங்கள் இதனை மூடி மறைக்கும் உபாயங்களைக் கையாளுகிறார்களே தவிர, குற்றவாளிகளை அம்பலப்படுத்திட தயக்கம் காட்டுகிறார்கள். தமிழ் மண், பெண்களைக் கண்களாக மதித்த மண் என்பதை மீண்டும் நிலை நாட்டவேண்டும். மண்ணுக்கும் கேடாக பெண்ணை என்றும் மதிக்கும் சமூகமாக மாற்றி, விண்ணுக்கு உயரும் அளவுக்கு அவர்களை உயர்த்திய பெரியார் மண்ணிலா இப்படிப்பட்ட அவலங்களும், அருவருப்புகளும் அரங்கேற்றங்களாக நடைபெறுவது?

அதில் மேலும் ஒரு கொடுமையிலும் கொடுமை பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பங்களிலிருந்து பயமுறுத்தி, பண வசூல் செய்த கொடுமை, வல்லுறவும், வன்நெஞ்சமும் கூட்டணி சேர்ந்த கதை அல்லவா?

குற்றவாளிகள் சட்டத்தின் 'சந்து பொந்துகளை'ப் பயன்படுத்தி தப்பித்து விடக் கூடாது! அத்துடன் இனி, வழக்கு விசாரணை, கண்டுபிடிக்கப்பட வேண்டிய எஞ்சிய குற்றவாளிகள், பழைய குற்றவாளிகளை துரிதமாக, வேகமாக விசாரித்து விரைந்து நீதி வழங்கி கடும் தண்டனை அவர்கள் அடைய வேண்டும்.
தமிழ்நாட்டு 'நிர்பயா'க்களுக்கு அப்போதுதான் உரிய பாதுகாப்பும், பெண்களைப் பெற்ற பெற்றோருக்கும் நம்பிக்கையும் துளிர்க்கும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்