இளைஞர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்; திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அளித்த அனுமதியை உடனே ரத்து செய்க: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

இளைஞர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொண்டு, திரையரங்குகளில் 100 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அளித்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.07) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்றே மத்திய, மாநில அரசுகள் தினமும் வெளியிட்டு வரும் கள நிலவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிரதமர் மோடி, திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், படிப்படியான தளர்வுகளுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதித்தது.

கரோனா முற்றிலும் ஒழிக்கப்படாத சூழலில், 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதித்ததையே, தவறு என்று மருத்துவத் துறையினர் சுட்டிக்காட்டினர். குளிரூட்டப்பட்ட திரையரங்குக்குள் கரோனா தொற்று வேகமாகப் பரவும் என்று எச்சரித்தனர்.

இந்நிலையில், மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி 100 சதவிகிதப் பார்வையாளர்களைத் திரையரங்குகளில் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கதவுகள் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட திரையரங்கில் கரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலே, பலருக்கும் தொற்று பரவும் என்று மருத்துவர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ஐஐடி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது இளைஞர்கள் பெரும்பாலானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதித்தது சரியா?

உருமாறிய கரோனா பரவி வரும் நிலையில், மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, எந்த அடிப்படையில் அனுமதித்தது?

இதற்கு மருத்துவர் குழுவினர் பரிந்துரைத்திருந்தால், அதன் விவரத்தை வெளியிட வேண்டும். இன்னும் கரோனா அச்சத்திலேயே மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், சிறிதும் அதைப் பற்றி யோசிக்காமல் 100 சதவிகித இருக்கையுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்ததன் பின்னணி என்ன? என்பது குறித்து மக்களே சந்தேகங்களை எழுப்பத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு எழுதிய கடிதத்தில், 'தமிழகத்தில் 100 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது' என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தேவையான உத்தரவை பிறப்பிக்குமாறும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

'முகக்கவசம் அணியுங்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்' என்று இன்றும் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கையும் நீட்டித்துக் கொண்டு, திரையரங்குகளையும் 100 சதவிகிதப் பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிப்பது முரண் அல்லவா?

மருத்துவ நிபுணர்களும், மத்திய உள்துறைச் செயலாளரும் எச்சரித்தும், இந்த விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் 100 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்ததைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இளைஞர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொண்டு, திரையரங்குகளில் 100 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அளித்த அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்