குடியுரிமைச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியதற்குக் காரணம், அதிமுக அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. இப்படி ஆதரித்த முதல்வர் பழனிசாமிக்கு சிறுபான்மையினர் பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது இது சிறுபான்மையினர் அணி நடத்தும் நிகழ்ச்சி போல இல்லை. பெரும்பான்மை மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்த வாய்ப்பை உருவாக்குவதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். ஒருவரை ஒருவர் பிணைப்பதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோமே தவிர, பிரிப்பதற்காக அல்ல.
வேறு வேறு இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் தமிழர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடியினர். அந்த உணர்வை நாம் பெற்றால் நம்மை யாரும் பிரிக்க முடியாது, வீழ்த்த முடியாது.
இறை நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால்தான், தந்தை பெரியார், 'பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து' என்று சொன்னார். 'பக்திப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரமும் நாடு முழுவதும் தொடரட்டும்' என்று தலைவர் கருணாநிதி சொன்னார்.
இரண்டு பிரச்சாரமும் கருத்து விவாதமாக இருக்கலாமே தவிர கைகலப்பு மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்கம் தெளிவாக இருந்தது. அதனால்தான் பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை. ஆனால், இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயல்கிறார்கள்.
அவர்களுக்கு, சொல்வதற்கு சாதனைகளோ, கொள்கையோ இல்லாததால் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள். அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது.
இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பவும் முடியாது. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஏமாற்றவும் முடியாது. இது தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். சிறுபான்மை இயக்கத்துக்கும், திமுகவுக்கும், தலைவர் கருணாநிதிக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்வது ஆகும். தொப்புள் கொடி உறவு போன்றது என அனைவரும் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் அவையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர சிலர் முயன்றார்கள். அப்போது கடுமையாக எதிர்த்தவர் நம்முடைய காயிதே மில்லத். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது என்று சொன்னவர் மட்டுமல்ல, தமிழைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் வீரர்தான் நம்முடைய காயிதே மில்லத்.
''வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான எனது தாய்மொழியுமான தமிழ் மொழியே ஆட்சி மொழியாகலாம்" என்று சொன்னவர் காயிதே மில்லத். அத்தகைய தமிழ் உணர்ச்சிதான், தாய் மொழிப்பற்றுதான், தமிழின உணர்வுதான் இன்றைக்கு நமக்கு முக்கியமான தேவை.
1965-ம் ஆண்டு பாகிஸ்தான் மூலமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வந்தபோது, பாகிஸ்தான் நாட்டை கடுமையாக விமர்சித்தவர் காயிதே மில்லத். இந்தியாவைக் காக்கத் துடித்தவர் காயிதே மில்லத்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உருவாக்கியது திமுக. அந்த மாற்றத்தை உருவாக்க அண்ணாவுக்கு அப்போது தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். விருகம்பாக்கம் மாநாட்டில் கலந்துகொண்ட காயிதே மில்லத், ''அண்ணா உங்கள் தலைவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர்" என்று குறிப்பிட்டார்.
பாஜக அரசுக்கு ஜனநாயகத்தைப் பற்றியோ, சமத்துவம் பற்றியோ, சகோதரத்துவம் பற்றியோ, மதநல்லிணக்கம் பற்றியோ கவலை இல்லை. இத்தகைய பாஜக அரசுக்குத் தலையாட்டும் பொம்மை அரசாக இருக்கிறது அதிமுக அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா? அதிமுக ஆதரிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. இதை விட அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் இருக்க முடியுமா? இதைவிடச் சிறுபான்மையினருக்கு வேறு துரோகம் செய்ய முடியுமா?
காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்கிறார்கள். 'இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது' என்று சொன்னார் பழனிசாமி.
1999ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா அம்மையார், 'என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான். அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்' என்று சொன்னார். இது பழனிசாமிக்குத் தெரியுமா? ஜெயலலிதாவின் இந்தக் கனவை பழனிசாமி காப்பாற்றுவாரா?
நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பேசி இருக்கிறார். இத்தகைய அதிமுகவுக்குச் சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டமானது இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத் தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம்.
மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துகளுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம். மக்களவையில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் அந்தச் சட்டம் நிறைவேறியது.
மாநிலங்களவையில் நிறைவேறியதற்குக் காரணம், அதிமுக அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது. அந்தக் குடியுரிமைச் சட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார்.
அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போலப் பேசினார் முதல்வர். அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல், கேட்ட பழனிசாமிக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இது சிறுபான்மையினருக்கும், தமிழருக்கும் சேர்த்து செய்யப்பட்ட இரட்டைத் துரோகம். இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் செய்ய மாநிலங்களவையில் நம்முடைய உறுப்பினர் திருச்சி சிவா கொடுத்தார். பிற மதத்தவரைப் போல இஸ்லாமியர்களையும் இணைக்க வேண்டும், நாடுகள் வரிசையில் இலங்கை நாட்டை இணைக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு திருத்தங்கள்.
அந்தத் திருத்தங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது. தோற்கடிக்கப்பட்டது என்றால் தோற்கடித்த வாக்குகள் யாருடைய வாக்குகள்? அதிமுகவின் 11 வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு. அதாவது இஸ்லாமியர் பெயரையும் ஈழத்தமிழர் பெயரையும் சேர்க்க வேண்டும் என்பதற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிமுகவும் பாமகவும்.
இதைத்தான் தமிழினத் துரோகம் என்று சொல்கிறேன். இப்படிப்பட்ட துரோக அரசுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசு. சிறுபான்மையினர் மட்டுமே இந்த அரசுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அனைத்து மக்களுமே புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய விவசாயிகள் நலனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அவை. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மழையில் கடும் குளிரில் தலைநகர் டெல்லியில் ஒரு மாதகாலமாகப் போராடி வருகிறார்களே விவசாயிகள். அவர்கள் சிறுபான்மையினர் மட்டுமா? அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும்தானே அங்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஜிஎஸ்டியால் ஏறிய அநியாய விலையால் பாதிக்கப்பட்டது அனைத்து இந்திய மக்களும்தானே. பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டது அனைத்து இந்திய மக்களும்தானே. சிலிண்டர் விலையால் பாதிக்கப்பட்டது அனைத்து இந்திய மக்கள்தானே. நீட் தேர்வு கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவச் செல்வங்கள் சிறுபான்மையினரா? அனைத்து இனத்தையும் சேர்ந்தவர்கள்தானே.
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று சொன்னதால் ஏமாந்தது அனைத்து மக்களும்தானே. கருப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாகத்தானே பாஜக சொன்னது. இப்படி பாஜகவால் ஏமாற்றப்பட்டவர்கள் சிறுபான்மையினர் மட்டுமல்ல, பெரும்பான்மையினரும்தான். அனைத்து இனத்தவர்களும், மொழியினரும், மதத்தவரும்தான்.
எனவே பாஜக அரசாக இருந்தாலும்- அதிமுக அரசாக இருந்தாலும் அவர்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானவர்கள். இந்தக் கூட்டணியை நிராகரிக்க வேண்டியது அனைவரது கடமையும் ஆகும்.
இவை அனைத்துக்கும் மேலாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
விவசாயிகள் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நாங்கள் விளைவிக்கும் பொருளுக்கு ஆதார விலை வேண்டும் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். தர மறுக்கிறது பாஜக அரசு. அப்படிக் கொடுத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.
அவரது நோக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு பாதகம் இல்லாமல் ஆட்சி நடத்துவது. ஆனால், விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக மழையில், கடும் குளிரில் துடித்தபடி போராடி வருகிறார்கள். இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள்.
இது பிரிட்டிஷ் ஆட்சி காலக் கொடுமையைவிடக் கொடூரமானது. இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு வருகிறார்கள். நேற்றைய தினம் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துள்ளார்.
“நான் மோடி ஆதரவாளர். மோடியின் திட்டங்கள் காகிதத்தில்தான் உள்ளன. எனது உறுப்புகளை விற்று மின் கட்டண பாக்கியைக் கட்டி விடுங்கள். எனது உடலை சௌகான் சிங் அரசாங்கத்திடம் கொடுத்து விடுங்கள்” என்று அவர் எழுதி வைத்துள்ளார்.
அவர் பெயர் முனேந்திர சிங் ராஜ்புத். கரோனா ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த விவசாயி அவர். ஊரடங்கு காரணமாக அவரது மாவு மில்லும் ஓடவில்லை. இதனால் மின் கட்டணம் ரூ 86,000-ஐக் கட்ட இயலவில்லை. பாஜக அரசாங்கமோ அவருக்கு அவகாசம் தர மறுத்தது. அவரது மில், இரு சக்கர வாகனம், 10 குதிரை சக்தி (ஹார்ஸ் பவர்) கொண்ட அவரது மோட்டார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மின்சாரப் பணியாளர்கள் அவரை நடுத்தெருவில் வைத்து அவமானப்படுத்தினர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராஜ்புத், தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாளைக்கு முன்னர் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி செய்தியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணசாமி என்ற ஒரு விவசாயி, தனது இரண்டு வயது பேத்திக்கு, மண்ணில் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயக் கடனைக் கட்டமுடியவில்லை. அவர் காகிதத்தில் கடிதம் எழுதி வைக்கவில்லை. “மன்னித்துவிடு மித்ரா“ என்று, தனது பேத்திக்கு, தான் விவசாயம் செய்த மண்ணிலேயே எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.
இப்படி, விவசாயிகளுக்கு மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக அரசும் இன்றைக்குப் பல கொடுமைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் கோடிகளில் நாடாளுமன்றம் கட்டுகிறார்கள். இந்த விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாதா? அந்தக் கட்டிடம் இப்போது தேவையா என்று விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.
இதைத் தட்டிக் கேட்கும் கம்பீரமான தமிழகமாக இது இல்லை. எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் ஆதரித்து, மத்திய அரசின் அடியொற்றி நடந்து கொண்டிருக்கிறார். அவருக்கு விவசாயி என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா? எப்பொழுது பார்த்தாலும் ‘விவசாயி விவசாயி’ என்று சொல்லிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்.
விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தால் விவசாயி ஆகிவிட முடியுமா? ‘நகத்தில் மண் இருக்கவேண்டும், அவர்தான் உண்மையான விவசாயி’ என்று அண்ணா சொல்வார். ஆனால், விவசாயிகளின் ரத்தக்கறை படிந்த கையோடு அலைந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுதான் உண்மை.
நீங்கள் எல்லாம் ஒரு முடிவெடுத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். முடிவெடுத்துவிட்டு வந்திருப்பவர்களிடம் அதிகம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேடையில் இருக்கக்கூடிய எங்களை எல்லாம் விட உங்களுக்குத்தான், இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்ற ஆர்வமும், மாறும் என்ற நம்பிக்கையும் அதிகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை
நான் இந்தக் கூட்டத்தை மட்டும் வைத்துப் பேசுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். காணொலிக் காட்சி மூலமாக மாவட்டந்தோறும் பல கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதில் ஒவ்வொரு கூட்டத்திலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதுடன், சமூக வலைதளங்கள் மூலமாகப் பல லட்சம் பேர் பார்க்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும்தான் நடத்த வேண்டி உள்ளது.
அதைத் தொடர்ந்து மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு இல்லை என்றாலும் - குறிப்பிட்ட சில இடங்களுக்கு - அதாவது யார் யார் நிச்சயமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேனோ அந்த இடங்களுக்கு கட்டாயமாகச் சென்று கொண்டிருக்கிறேன். இங்கே காதர் மொய்தீன் 7 இடங்களில் மட்டும் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தது எனச் சொன்னார் அதைக்கூட விடக்கூடாது.
நாம் தயாராக இருப்பதை விட மக்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு இருக்கும் உண்மையான நிலவரம். அதன்படி நாம் வெற்றி பெற அனைவரும் ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம். அதற்காகத்தான் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்கள்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago