மழையால் பாதிப்பு: ஈரப்பத உச்ச வரம்பின்றி நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரப்பத உச்ச வரம்பின்றி நெல்லைத் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காவிரிப் பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே நிவர், புரெவி புயல்களால் வயல்களில் தேங்கிய நீர் வடியாத நிலையில், இந்த மழை உழவர்களின் துயரத்தை அதிகரித்திருக்கிறது.

காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இம்முறை விளைச்சலும் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், நல்ல லாபம் கிடைக்கும் என்று உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்தான், அடுத்தடுத்த நிவர் மற்றும் புரெவி புயல்களால் தொடர் மழை பெய்தது.

புயல்களை அடுத்துத் தொடர் மழை

அதனால், காவிரிப் பாசன மாவட்டங்களிலும், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பல வகையான பயிர்கள் சேதமடைந்தன. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் முன்பே காவிரிப் பாசனப் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மழையில் பாதிக்கப்படாமல் தப்பியிருந்த நெல் உள்ளிட்ட பயிர்களைப் புதிய மழை பாழாக்கியுள்ளது.

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தமிழக அரசு இழப்பீட்டை அறிவித்து, அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை முதல் செலுத்தப்பட உள்ளது. இத்தகைய சூழலில் புதிய மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற கவலை விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு காவிரிப் பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் புதிய மழையால் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாகக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிக ஈரப்பதத்தால் வயலில் சாய்ந்த நெற்பயிர்கள்

இது ஒருபுறமிருக்க, கடலூர் மாவட்டத்திலும், காவிரிப் பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதிகளிலும் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக சம்பா பயிர்களை அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக சம்பா பயிர் அறுவடையின்போது வயல் உலர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் எந்திரங்களை வயலில் இறக்கி அறுவடை செய்ய இயலும். ஆனால், நிவர், புரெவி புயல் காரணமாகப் பெய்த மழையால் வயலில் தேங்கிய நீர் இன்னும் முழுமையாக வடியாததால், வயலில் 2 அடிக்கும் கூடுதலான ஆழத்திற்குச் சேறு உருவாகியுள்ளது. நெற்பயிர்களும் அதிக ஈரப்பதம் காரணமாக வயலில் சாய்ந்துள்ளன. தலை சாய்ந்த நெற்பயிர்களை அடுத்த சில நாட்களுக்குள் அறுவடை செய்யாவிட்டால், நெற்கதிர்கள் வயலில் கொட்டி முளைக்கத் தொடங்கும் வாய்ப்புள்ளது.

பல இடங்களில் உழவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு நடுவில் அறுவடை செய்தாலும் கூட, அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. ஒரு ஏக்கரில் குறைந்தது 20 குவிண்டால் முதல் 22 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால், மழை பாதிப்புகள் காரணமாக ஏக்கருக்கு 10 குவிண்டால் மட்டுமே விளைச்சல் கிடைத்திருப்பதாக உழவர்கள் கூறியுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லும் அதிக ஈரப்பதம் கொண்டதாக இருப்பதால் அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை. அதனால், ஒரு குவிண்டால் நெல்லை ரூ. 1,300-க்குத் தனியார் வணிகர்களிடம்தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இது தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்சக் கொள்முதல் விலையில் மூன்றில் இரு பங்கு மட்டுமே.

ஏக்கருக்கு ரூ.20,000 வரை இழப்பு

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.30,000 வரை செலவாகும். ஏக்கருக்கு 20 குவிண்டால் விளைச்சல் இருந்தால், ரூ.39,160 வருமானம் கிடைக்கும். அறுவடை - போக்குவரத்து செலவுகள் போக ஏக்கருக்கு ரூ.6,000 வரை லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது மழை பாதிப்பு காரணமாக, கிடைத்த 10 குவிண்டால் நெல்லையும் ரூ.13,000 என்ற விலைக்கு விற்க வேண்டியிருப்பதால், இறுதிக் கட்டச் செலவுகளையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.20,000 வரை இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்க முடியாது.

தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனாலும் உழவர்களின் நலன் கருதி இப்போது 20% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மேலும் தளர்த்தி, ஈரப்பத உச்ச வரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்ச வரம்பின்றி நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்குத் தமிழக அரசு ஆணையிட வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்