தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதம்: சிவகங்கை ஆட்சியர் பேட்டி

சிவகங்கை மாவட்டத்தில் மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் 9,750 ஏக்கரில் மிளகாய், 250 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுதவிர இளையான்குடி பகுதியில் அதிகளவில் வாழை சேதமடைந்துள்ளது. அதற்குரிய கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு பெற்றுத் தர முயற்சித்து வருகிறோம்.

பெரியாறு பாசன விவசாயிகளுக்கு உரிய பங்கீட்டு நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. பேரூராட்சித்துறை மூலம் தலா ரூ.3 கோடியில் சந்தை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளில் சாலை அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 226 கிராமங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும் நாற்றங்கால் பண்ணை அமைக்க தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு 100 நாள் திட்டம் மூலம் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில் நடப்படும். இதன்மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க முடியும், என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE