எங்களது பொது எதிரி திமுக தான்; அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. எங்களது பொது எதிரி திமுக தான் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் சார்பில் கந்தசஷ்டி கவசத்தை முழுமையாக ஒப்புவிக்கும் 100 பேருக்கு தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கந்தசஷ்டி கவசம் ஒப்புவித்த 100 பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கும் விழா இன்று தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு மதுரை கணேஷா குழும தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். கின்ஸ் அகாடமி தலைவர் எஸ்.பேச்சிமுத்து வரவேற்றார். பாஜக மாநில துணைத் தலைவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் ஒப்புவித்த 100 மாணவ, மாணவியருக்கு தலா அரை கிராம் எடை கொண்ட தங்க நாணயங்களை வழங்கி பேசினார். நிறைவாக அகாடமி மாணவி எம்.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவைப் பொறுத்தவரை வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரமும், எந்தத் தொகுதி வேண்டும் எனக் கேட்கும் அதிகாரமும் மாநில தலைமைக்குக் கிடையாது. கட்சியின் மத்திய தலைமை தான் இது பற்றி முடிவு செய்யும். தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக வெளியான 38 தொகுதிகள் அடங்கிய பட்டியல் பாஜக தயாரித்தது அல்ல.

அந்தப் பட்டியலை பாஜக சார்பில் யாரும் வெளியிடவும் இல்லை. இதுபோன்று வெளியிடும் கலாசாரமும் பாஜகவுக்கு கிடையாது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த யாரோ வெளியிட்ட பட்டியல் அது. நிச்சயமாக அது பாஜகவின் வேலை கிடையாது.

எந்தெந்த தொகுதியை கேட்பது என்பது குறித்து முடிவு செய்ய கட்சி தலைமை சார்பில் குழு அமைக்கப்படும். அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை. குழு அமைத்த பிறகே பேசி முடிவு செய்யப்படும். அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் வேறு கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பொங்கலுக்கு பிறகு தேர்தல் களம் சூடுபிடித்த பிறகே அது தெரியவரும்.

எங்களைப் பொறுத்தவரை அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு கொள்கை இருக்கும். அதற்காக கூட்டணியில் குழப்பம் என்று அர்த்தமல்ல. எங்களது பொது எதிரி திமுக தான்.

அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சி தலைமை எந்த தொகுதியை சொன்னாலும் அங்கு போட்டியிட தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் கட்சி பேதமின்றி தண்டிக்கப்படவேண்டும் என்பதே முன்னாள் போலீஸ் அதிகாரியாக எனது கருத்து என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE