புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடவைத்தது கிரண்பேடியும் மத்திய உள்துறையும்தான்: மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நாராயணசாமி பதில்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் உள்ள நியாயவிலைக் கடைகளை மூடவைத்தது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும்தான் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும் நியாயவிலைக் கடைகள் பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை. நியாயவிலைக் கடைகளில் பணிபுரிவோருக்கு பல ஆண்டுகளாக ஊதியமும் தரப்படவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (ஜன.06) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த 3-ம் தேதி புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, புதுச்சேரி காங்கிரஸ் அரசு நியாயவிலைக் கடைகளை மூடிவிட்டதாகவும், நியாயவிலைக் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரியினை ஆக்கிவிட்டதாகவும் ஒரு தவறான தகவலைப் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியிருக்கிறார். குறுகிய அரசியல் நோக்கோடு சிலர் தெரிவித்த தவறான தகவலை அப்படியே பேசியிருக்கிறார் என்பது வருத்தத்துக்குரியது.

கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் பதவியேற்றவுடன் 06.06.2016 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி சிவப்பு அட்டைதாரர்களுக்கும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி என உயர்த்தி தரமான அரிசி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இலவசமாக வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

அப்போது, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க வேண்டும் என்று தன்னிச்சையாகக் குறைத்து, அதனை அமல்படுத்த அதிகாரிகளுக்கு கிரண்பேடி உத்தரவிட்டார்.

தரமான அரிசி வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் பாராட்டிய நிலையில், நியமன எம்எல்ஏவும், பாஜக மாநிலத்தலைவருமான சாமிநாதன் அரிசியின் தரம் சரியில்லை என்று ஆளுநரிடம் உள்நோக்கத்துடன் புகார் தந்தார்.

இதற்காகவே காத்திருந்ததுபோல, உடனே அரிசிக்குப் பதிலாகப் பணமாக வழங்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். நாங்கள் நேரில் சந்தித்து அரிசி தரக் கோரினோம். ஆனால், ஆளுநர் ஏற்கவில்லை.

குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுகின்ற அரிசியை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் கொள்முதல் செய்து, அரிசியை வழங்கும்படியும், அவ்வாறு அரிசியை வழங்கினால் தரமான அரிசியும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், அரசுக்கும் பணம் மிச்சமாகும் என்றும் கூறினோம். அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு பல முறைகளில் அரிசி வழங்குவதில் பல தடைகளை ஏற்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, இலவச அரிசியைத் தொடர்ந்து வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய கோப்பை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். மத்திய உள்துறையோ, அரிசிக்குப் பதிலாகப் பணம் தர உத்தரவிட்டது. கிஷண் ரெட்டி இந்த அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார்.

இதனால், இலவச அரிசித் திட்டத்தினைத் தொடரமுடியாமல் போய்விட்டது. இந்த அரிசியினைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யத் தரப்படும் தொகைதான் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். இலவச அரிசித் திட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் விருப்பத்திற்கிணங்க மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுத்தப்பட்டதால் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் போனது.

ஒருபுறம் மத்திய அரசு, அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் உணவு தானியங்களை நாடு முழுக்க வழங்கிவருகிறது. அதேபோல, 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தினையும் அமல்படுத்துகிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகமும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுச்சேரி மக்களுக்கு அரிசிக்குப் பதிலாகப் பணமாக வழங்க உத்தரவிடுவது நம் மாநில மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்ட'த்தினை மாற்றி அந்தந்தக் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்குக்கு மத்திய அரசே டெல்லியிலிருந்து பணத்தைச் செலுத்தலாம் என்று குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் மத்திய உள்துறை அமைச்சகமும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் பரிந்துரைக்க வேண்டியதுதானே? புதுச்சேரி மக்கள் மட்டும் ஏமாந்தவர்களா?

புதுச்சேரியில் உள்ள நியாயவிலைக் கடைகளை மூடவைத்தது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும்தான். இதுகுறித்த கோப்புகளையும் கடிதங்களையும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகப் பெற்று உண்மை நிலையினை அறிந்து கொள்ளலாம்".

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்