உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக விழா கமிட்டியினர் இருவரையும் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாள் முதல் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும்.
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 14-ம் தேதி நடக்கும். அடுத்த மறுநாள் 15-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி 16-ம் தேதி நடக்க உள்ளது.
இந்தப் போட்டியைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூரில் திரள்வார்கள். அலங்காநல்லூர் வாடிவாசலில் தங்களின் காளையை அவிழ்ப்பதற்காகவே வேறு எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்வார்கள்.
அதனால், இந்தப் போட்டியில் உள்ளூர் காளைகள் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்ளும். அதுமட்டுமில்லாது, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் காளைகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கும்.
இவர்களின் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு விழாக் குழு அறிவிக்கும் பரிசுகளுடன் அந்த நேரத்தில் சில சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப்படும். அதனால், இந்தக் காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்களிடையே போட்டி ஏற்படும். வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து ஓடி வரும் காளைகள், அடக்க வரும் மாடுபிடி வீரர்களை தூக்கிப்பந்தாடுவதும், சீறும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதுமாக ஜல்லிக்கட்டுப்போட்டி ஆரம்பம் முதல் இறுதி வரைப் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும்.
தமிழகம் முழுவதம் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் போட்டி வாடிவாசலில் தங்கள் காளைகளை அவிழ்ப்பதை பெருமையாக கருதுவார்கள். அந்தளவுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் விறுவிறுப்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. உள்ளூர் விழா கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசு அறிவுறுத்திய விதிமுறைகள் படி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டைப்போல் உற்சாகம் குறையால் இந்த ஆண்டும் போட்டியை நடத்துவதற்காக கார், பைக், ஏ2 பால் பசுமாடு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் வழங்கப்பட உள்ளது.
கரோனா தொற்று நோய் பரவலால் ஆரம்பத்தில் இந்த ஆண்டு நடக்கும் போட்டிக்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும், பதட்டமும் ஏற்பட்டது. தற்போது அரசு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அனுமதி வழங்கியுள்ளநிலையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்க முதலமைச்சர் கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் ஜே.சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, ‘‘உறுதியாக இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வருவார்கள். அவர்களை உள்ளூர் அமைச்சர்கள் வழிகாட்டுதலின் முறைப்படி நேரில் சந்தித்து போட்டியை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளோம், ’’ என்றார்.
முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். ஆனால், மதுரையில் இன்னும் அவர்கள் பிரச்சாரத்த்தை தொடங்கவில்லை. அதனால், ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்துவிட்டு பிரச்சாரத்தையும் அவர்கள் தொடங்க வாய்ப்புள்ளதாக மதுரை மாவட்ட அதிமுகவினர் தெரிவித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் தடை விதித்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடையில்லாமல் நடத்துவதற்கு அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என்பதால் இந்தப் போட்டியைத் தொடங்கி வைப்பதற்கு முதல்வரும், துணை முதல்வரும் ஆர்வமாக இருப்பார்கள், அந்தப் பெருமையைத் தவறவிட மாட்டார்கள் என்றும் அதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago