பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுகவினர் உட்பட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 06) வெளியிட்ட அறிக்கை:

"பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள்.

'அண்ணா அடிக்காதீங்கண்ணா..' என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. பத்திரிகை-தொலைக்காட்சி-சமூக வலைதளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின.

இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதைத் தொடக்கத்திலிருந்தே திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், மகளிர் அமைப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வந்தனர். அவர்களைக் கைது செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது அதிமுக அரசு.

இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, திருநாவுக்கரசு என்பவரைக் கைது செய்து, அவரை மட்டும் பலிகடாவாக்கி, ஆளுந்தரப்பினரைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை.

அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களின் குடும்பத்தினருடன் தொடர்புடைய, ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ள 'பார்' நாகராஜன் போன்ற அதிமுக நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட 'பார்' நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை காட்டிய அக்கறையும், அரசுத் தரப்பில் எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக ஜாமீன் கிடைக்கச் செய்ததும், வெளியே வந்த 'பார்' நாகராஜனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தித்ததும், அவரது அலுவலக வளாகத்திலேயே நின்று ஆளுங்கட்சி நிர்வாகியான நாகராஜன் பேட்டி அளித்ததும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே அப்பட்டமாகக் காட்டியது.

முழுக்க முழுக்க அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன், அதிமுகவில் தொடர்புடையவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பாலியல் கொடூரத்தை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டித் திசை திருப்பவும், செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்-நிருபர்களையே குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தி அதிமுக அரசும் அதன் ஏவல் துறையான காவல்துறையும் செயல்பட்டதை திமுக தொடர்ந்து எதிர்த்து, வலுவான குரல் கொடுத்தும், போராடியும் வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாதது கவலை அளித்தது. தாய்மார்களும், பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தாரும் பாதுகாப்பில்லாத சூழலை நினைத்து அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதோ பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு என நினைத்த நிலையில், பாபு, ஹேரேன்பால், அருளானந்தம் ஆகிய மூவரை சிபிஐ இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இளம்பெண்களை நம்ப வைத்து, அதன்பிறகு ஏமாற்றி, பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, 'பெல்ட்'டால் அடித்து சித்ரவதை செய்து, சீரழித்த கொடூரன்களில் மூவர் சிக்கியிருக்கிறார்கள். இதில் பாபுவும், ஹேரேன்பாலும் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டவர்கள். குற்றப் பின்னணியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவர்கள். தொடர்ச்சியான புலன் விசாரணையின் அடிப்படையில், மூன்றாவதாகக் கைதாகியுள்ள அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர். அதிமுகவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர். தோண்டத் தோண்ட இன்னும் நிறையத் தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும்.

சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, 'பார்' நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழிவகுத்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன். பொல்லாத அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சிபிஐ விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அதிமுகவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்