சென்னை உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்துக்கு புதிய கட்டிடம் கட்டிமுடித்து திறக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. உட்புற வடிவமைப்பு வேலைகள் முடியாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்கள் முதன்முதலில் நீதிமன்றம் அமைத்த இடம் சென்னை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 60 ஆண்டு காலத்துக்கு (1801 1862) சென்னையில்தான் உச்ச நீதிமன்றம் செயல்பட்டது. அதிகார எல்லைகள் விரிவடைந்ததால் சென்னை, மும்பை, கொல்கத்தா உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1862-ல் தொடங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம் 150 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர் நீதிமன்றக் கட்டுமானப் பணிகள் 1888 அக்டோபர் முதல் 1892 ஜூலை வரை நடந்தது. அப்போது அதற்கான செலவு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.
பாரிமுனையில் இப்போது செயல்படும் கட்டிடத்துக்கு வருவதற்கு முன்பு 1862 முதல் 1892 வரை சுங்கக் கட்டிடத்தில்தான் உயர் நீதிமன்றம் செயல்பட்டது. இந்த கட்டிடத்தில்தான் 1817 முதல் 1862 வரை உச்ச நீதிமன்றமும் செயல்பட்டது. அந்த கட்டிடத்தின் புகைப்படம் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களையும் இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். சுதந்திரத்துக்கு முன்பு நீதிமன்ற அறையின் வடிவமைப்பு, நீதிபதிகளுக்காக கலைநயத்துடன் மரத்தால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், செங்கோல் உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘உயர் நீதிமன்ற சிந்து’
1940-ல் பணியாற்றிய தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் குழு புகைப்படம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்ற டி.முத்துசாமி ஐயரின் மார்பளவு சிலை, முதல் இந்திய நிரந்தர தலைமை நீதிபதியாகப் பதவியேற்று நீண்டகாலம் (1948-1961) பணியாற்றிய பி.வி.ராஜமன்னாரின் மார்பளவு சிலை, உயர் நீதிமன்றத்தின் புகழ்பாடி செஞ்சி ஏகாம்பர முதலியார் இயற்றிய பாடல் (உயர் நீதிமன்ற சிந்து) ஆகியவற்றையும் இங்கு காணலாம்.
எம்கேடி என்எஸ்கே வழக்கு தீர்ப்பு
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையைக் குறைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இருந்து எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணனை விடுவித்து பிறப்பித்த உத்தரவு போன்ற முக்கிய தீர்ப்புகளும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புராதனப் பெருமையை பறைசாற்றும் வகையிலான அருங்காட்சியகத்தை புதிய கட்டிடத்துக்கு மாற்ற திட்டமிட்டு, உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு 2014 அக்டோபரில் திறக்கப்பட்டது. முதல் தளம் அருங்காட்சியகத்துக்கு ஒதுக்கப்பட்டது. 2-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அருங்காட்சியகத்தில் உட்புற வடிவமைப்பு வேலைகள் முடியாததால் புதிய கட்டிடத்துக்கு அருங்காட்சியகம் மாற்றப்படவில்லை. 4-வது நுழைவுவாயில் அருகே உள்ள பழைய கட்டிடத்திலேயே செயல்படுகிறது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரிகள் கூறியபோது, ‘‘புதிய கட்டிடத்தில் ரூ.10 லட்சத்தில் உட்புற வடிவமைப்பு வேலைகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. இதற்கு மத்திய அரசிடமும் நிதி கோரியுள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் பணிகளை முடித்து, புதிய கட்டிடத்துக்கு அருங்காட்சியகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago