ராமநாதபுரத்தில் தனியார் கேளிக்கை விடுதியை மூடக்கோரி கிராம மக்கள் காதில் பூச்சூடி போராட்டம்

ராமநாதபுரம் மண்டபத்தில் செயல்படும் தனியார் கேளிக்கை விடுதியை நிரந்தரமாக மூடக்கோரி கடல் தொழிலாளர் சங்கத்தினர், கிராம மக்கள் காதில் பூச்சூடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தோணித்துறை, தோப்புக்காடு கிராமங்களில் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் தனியார் கேளிக்கை விடுதியை (ரிசார்ட்) அகற்றக்கோரி கடல் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு), தோணித்துறை, தோப்புக்காடு மக்கள் சார்பில் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காதில் பூச்சூடி பேரணி மற்றும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த வழிவிடு முருகன் கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200 பேர் நேற்று காலை திரண்டனர்.

அதனையடுத்து ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை, பஜார் போலீஸ் ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோர், சிஐடியு நிர்வாகிகள் சிவாஜி, கருணாமூர்த்தி, ஜஸ்டின், கிராமத் தலைவர்கள் பால்ச்சாமி, ரூபன் ஆகியோரை அழைத்து பேசி, சார் ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தச் சென்றனர்.

சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, சிஐடியு சங்க நிர்வாகிகள், கிராம தலைவர்களை அழைத்து பேசினார். அப்போது சார் ஆட்சியர் கேளிக்கை விடுதியை மூட கால அவகாசம் வேண்டும் என்றும், ஆய்வு செய்த பின்னரே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதற்கு சிஐடியு சங்கத்தினர், கிராம மக்கள், மீனவர்கள் ஒத்துக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து, காதில் பூச்சூடி சார் ஆட்சியர் அலுவலத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி கூறும்போது, அரசின் அனுமதியின்றி தனியார் உல்லாச கேளிக்கை விடுதி செயல்படுகிறது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுக்கோப்பையுடன் கேபரே நடனம் ஆடுகின்றனர்.

இப்பகுதி மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கடலில் பெரிய சிமெண்ட் உறைகள், பாறாங்கற்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. மேலும் அனுமதியில்லாமல் படகு சவாரியும் நடத்துகின்றனர்.

கடந்த டிசம்பர் 24-ல் கேளிக்கை விடுதியை ஆய்வு செய்த ராமநாதபுரம் வட்டாட்சியர் 2 நாட்களில் விடுதியை மூடிவிடுவதாக உறுதியளித்தார். அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் போராட்டத்தில் இறங்கினோம். சார் ஆட்சியரும் சரியான பதிலை தெரிவிக்காததால் காதில் பூச்சூடி போராட்டத்தில் குதித்தோம். விடுதியை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி கூறும்போது, அரசு அனுமதியின்றி செயல்படும் கேளிக்கை விடுதியை அதிகாரிகள் நிரந்தரமாக மூடவில்லை என்றால், தொழிற்சங்கத்தினரும் அப்பகுதி மக்களும் நேரடியாக இறங்கி மூடுவோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE