மருத்துவக் கல்வி இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்காமல் தாமதம்: மாணவர்கள் அவதி

By செய்திப்பிரிவு

7.5% உள் ஒதுக்கீட்டில் இடம் கோரி நீதிமன்றம் சென்ற மாணவர்கள் 8 பேரில் 3 பேர் வராத நிலையில் ஏற்பட்ட சட்டச் சிக்கல் குறித்த ஆலோசனைக்காக 2-ம் கட்டக் கலந்தாய்வு 3 மணி நேரம் கடந்தும் தொடங்காததால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான முதற்கட்டக் கலந்தாய்வு கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கியது. இடையில் நிவர் புயல் காரணமாக ஒரு வாரம் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு, அதன் பின்னர் டிசம்பர் மாதம் கலந்தாய்வு தொடர்ந்தது. கடந்த டிச.24-ம் தேதியுடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு இன்று (ஜன.4) தொடங்கியது. நேரு உள் விளையாட்டரங்கில் இன்று காலையில் கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கலந்தாய்வு தொடங்கவில்லை.

இன்றைய முதல் நாள் கலந்தாய்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடக்கிறது. இந்தியத் தொகுப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மீதமுள்ள இடங்கள் தமிழகத்துக்குத் திரும்ப அளிக்கப்பட்டன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும் 23 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் சேராமல் விட்ட 24 இடங்கள் என மொத்தம் 47 இடங்களுக்குக் கலந்தாய்வு நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் சுமார் 400 மாணவர்கள் பெற்றோருடன் வந்து காத்திருந்தனர். ஆனால், மருத்துவக் கலந்தாய்வு தொடங்கவில்லை. காரணம் குறித்து விசாரித்தபோது, கடந்த முறை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டதில் கட்டணம் கட்ட முடியாமல் சென்ற மாணவர்கள் பின்னர் அரசே கட்டணத்தை செலுத்தும் என்பதால் தங்களுக்கும் இடம் தர வேண்டும் என நீதிமன்றம் சென்றனர்.

இதில் 8 பேருக்கு தகுதி இருப்பின் கலந்தாய்வில் அரசு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று கலந்தாய்வுக்கு வர இருந்த 8 மாணவர்களில் 5 பேர் மட்டுமே வந்துள்ளனர். 3 பேர் வரவில்லை.

3 பேர் வராத நிலையில் அவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து என்ன நிலை எடுப்பது, வேண்டாம் என்று விட்டுச் சென்ற மாணவர்களுக்குக் கலந்தாய்வில் மீண்டும் இடம் அளிக்கலாமா என்கிற சட்டப் பிரச்சினை குறித்து ஆலோசனை பெற்றபின் கலந்தாய்வு தொடங்க உள்ளதால் தாமதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் இன்று மட்டுமே, பொது கலந்தாய்வு நாளை (ஜனவரி-5) நடைபெறுகிறது. ஒரு நாளில் 2 கட்டங்களாக நடக்கும் இந்தக் கலந்தாய்வு ஜனவரி 11-ம் தேதி வரை நடக்கிறது. முதல் மூன்று நாட்கள் பொது கலந்தாய்வும், பின்னர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மற்ற ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கின்றன. இதில் எந்தவித தாமதமும் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்