ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என மதுரையில் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார்.
மதுரை பாண்டிகோயில் அருகே மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தென் மண்டலம் உட்பட 38 மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
பி.எம்.மன்னன், கவுஸ்பாட்சா, வழக்கறிஞர் மோகன் குமார் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் அழகிரி பேசியதாவது:
"எனது அழைப்பை ஏற்று, ஆலோசனைg கூட்டத்திற்கு வந்துள்ள கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நன்றி. வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் மண்டபம் வரை எனது ஆதரவாளர்கள், கலைஞரின் உடன்பிறப்புகள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி கடலில் தள்ளியது.
கூட்டத்தைp பார்த்தவுடன் முடிவு கட்டிவிட்டேன். சதிகாரர்கள், துரோகிகளின் வீழ்ச்சிக்குg கிடைக்கும் முதல்படிக்கட்டு இது. எதையும் பொருட்படுத்தாமல் சொந்த செல்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதும் மகிழ்ச்சி.
முரசொலி பத்திரிகை நிர்வாகத்தைக் கவனிக்க, 1989-ல் மதுரை வந்தேன். அன்றிலிருந்து நான் உங்களுடன் ஒருவனாக இருந்து மதுரை மட்டுமின்றி, தென்மாவட்டத்தில் கழக தோழர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உங்களில் ஒருவனாகிவிட்டேன்.
என்னையும், உங்களையும் யாராலும் பிரிக்க முடியாது. பல துரோக சக்திகள் சேர்ந்து, கலைஞரிடம் இல்லாதது, பொல்லாதை சொல்லி, பேராசிரியருக்கும் தெரியாமல் என்னை கட்சியைவிட்டு நீக்கினர்.
கட்சியைவிட்டு நீக்கி, 7 ஆண்டுகளாகிவிட்டது. நான் உங்களுடன் பழகியபின், மாவட்ட, ஒன்றிய கழக தேர்தல்களில் பங்கேற்று, நானும் தொண்டனாகவே இருந்தேன். எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை.
இன்றைக்கும் நான் உங்களில் ஒருவன். மதுரை எம்ஜிஆர் கோட்டையாக இருந்தது. நான் தான் மாற்றினேன். நான் என்றால் நீங்களும் அதில் அடக்கம். பல்வேறு சோதனைகளை கடந்துவந்துள்ளோம்.
1993-ல் கலைஞர், திமுகவை எதிர்த்து, துரோகம் செய்து 11 மாவட்ட செயலர்களுடன் வைகோ வெளியேறியபோது, மதுரையில் ஒரு தொண்டனும் அவர்களுடன் போகவில்லை. அதை நான் மறக்க முடியாது. எத்தனையோ நேரத்தில் ஒத்துழைப்பு தந்துள்ளீர்கள்.
2000-ல் கட்சியைவிட்டு என்னை தற்காலிகமாக நீக்கினர். அப்போது 2001-ல் மதுரை மாநகராட்சி தேர்தல் வந்தது. அதில் நமது ஆதரவாளர்களின் ஆலோசனையின்படி, 10 பேர் போட்டியிட்டு 7 கவுன்சிலர்களை வென்றோம்.
அதிமுக அதிக இடங்களைப் பிடித்தாலும், மீண்டும் என்னைக் கட்சியில் சேர்த்து, துணைமேயர் பதவியை திமுகவுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். அதன்படி, சின்னச்சாமியை துணை மேயராக்கினோம்.
இதன்பின், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. பி.டி.ஆர் அமைச்சரானதுபோது, நீங்கள் மதுரை வரும்போது பெரிய வரவேற்பு கொடுக்கக் காத்திருக்கிறோம் எனக் கூறியபோது, அவர் வேண்டாம் என மறுத்தார். இருப்பினும், வரவேற்பு கொடுக்கத் தயாராக இருந்தபோதிலும், மதுரைக்கு வரும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அந்த நேரத்தில் நடந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் கவுஸ்பாட்சாவை எம்எல்ஏவாக்கினோம். அதற்கும் உறுதி துணையாக இருந்தீர்கள்.
மேற்கு தொகுதி தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும் என்றபோதிலும், கேஎஸ்கே. ராஜேந்திரனை (காங்., கூட்டணி) ஜெயிக்க வைத்தோம். இப்படி, எத்தனையோ வெற்றிகளை கண்டோம்.
இதைவிட திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை சொல்லலாம். திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயந்தது. அப்போது, நான் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்தேன். தலைவரின் அறிவுறுத்தலில் எனது தங்கை, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், தற்போதை திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம் வந்து, மண்றாடி கேட்டுக்கொண்டாலும் மறுத்தேன்.
தலைவர் கேட்டுக் கொண்டதால் ஏற்று தேர்தல் பணி செய்தேன். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என, மீடியாக்களில் சொன்னேன். அதன்படி வெற்றி பெற்றோம்.
திருமங்கலத்தில் மு.க.அழகிரி பார்முலா என, சில ஊடகங்களில் கூறினர். எங்களது உழைப்பு தான் வெற்றி பெற்றது. 1962 தேர்தலில் தஞ்சாவூரில் பண முதலையை எதிர்த்து கலைஞர் போட்டியிட்டபோது, இரவு 1 மணிக்கு தலைவர் பூத்துக்கு போவார். நானும் அத்தேர்தலில் சிறுவனாக இருந்து அவரிடம் தேர்தல் பணியைக் கற்றேன்.
அந்தப் பணியின்படி, திருமங்கலத்தில் பணி செய்து வெற்றியைப் பெற்றோம் தவிர, வேறு ஒன்றிமில்லை. திருமங்கலம் வெற்றி என்பது தலைவரின் பார்முலா. திருமங்கலம் வெற்றிக்குப்பின், என்னை பாராட்டுவதாகக் கூறி சென்னைக்கு என்னை அழைத்துபோது, விமான நிலையத்திற்கு 10 பேரை அனுப்பி வரவேற்றனர். அதுகூட தற்போதைய தலைவர் ஸ்டாலின் சதி தான். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தலைவரின் வாக்கை காப்பாற்றவே கட்சியில் பணி செய்தேன்.
இதற்கிடையில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கபட்டேன். அப்போது கூட, நான் தலைவரிடம் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை என தெரிவித்தேன்.
இது எங்களது ஆணை, ஏற்கவேண்டும் எனத் தெரிவித்தார். அதை ஏற்று மதுரைக்கு வந்தபோது, 15 மாவட்ட செயலர்கள் வரவேற்பு என்ற பெயரில் நடித்தனர்.
2009-ல் திருச்செந்தூர் இடைத்தேர்தலிலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் எனக் கூறினேன். அவர் 54 ஆயிரம் வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். 2009-ல் எம்பி தேர்தலில் தென் மாவட்டத்தில் நான் உட்பட 9 தொகுதியில் வெற்றி பெற்றோம்.
அந்த நேரத்திலும் கட்டாயப்படுத்தியே என்னை மத்திய அமைச்சராக ஆக்கினர்.
நாகர்கோயிலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பியதை தலைவரிடம் சொல்லி வெற்றி பெற வைத்தேன். இதெல்லாம் நான் கழகத்துக்கு செய்த துரோகமா. இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை என்னால் சொல்ல முடியும்.
உண்மையைச் சொல்கிறேன். திருமங்கலம் இடைத் தேர்தலின்போது, மதிய உணவுக்காக எனது தம்பி ஸ்டாலின், எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொன்முடி. ஐ.பெரியசாமி ஆகியோர் வந்தபோது, தலைவரிடம் சொல்லி, தம்பிக்கு (ஸ்டாலின்) பொருளாளர் பதவி வாங்கித்தரவேண்டும் என, வலியுறுத்தினர்.
உடனே போனில் சொன்னேன். அன்றைக்கு மாலையே அவர் பொருளாளராக தலைவரால் அறிவிக்கப்பட்டார்.
ஏனெனில் நான் தென்மண்டல செயலர் என்ற பொறாமையில் எனக்கு சமமாக இருக்க வேண்டும் என்பதை அவர் விரும்பியதால் அப்பதவியை கேட்டு வாங்கிக் கொடுத்தேன். மற்றொரு உண்மையை சொல்கிறேன். அன்றைய தினமே இரவில் எனது வீட்டுக்கு ஸ்டாலின், அவரது மனைவியும் சாப்பிட வந்தனர்.
அப்போது, நானும், எனது மனைவியும் சொன்னோம். தலைவருக்குப் பிறகு கட்சித் தலைவர், முதல்வர் எல்லாமே நீ தான். உனக்காக நான் பாடுபடுவேன். இதை அண்ணா, கலைஞரின் ஆணையாக தற்போது சொல்கிறேன். அவரது மனசாட்சிக்கு தெரியும். இதை அவர் மறுக்க முடியுமா.
ஆனாலும், அவர் ஏன் இப்படி எனக்கு துரோகம் செய்கிறார் எனத் தெரியவில்லை. நான் மத்திய அமைச்சரான பின், அந்தளவுக்கான அந்தஸ்துக்கு அவரும் வரவேண் டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
அமைச்சரான பின், என்னிடம் தலைவர் கேட்டார். உனது தம்பி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என்றபோது, தாராளமாக கொடுங்கள் என்றேன். நான் பதவி கேட்கவில்லையே எனக் கூறினேன்.
மந்திரி பதவி வைத்து, மக்களுக்காக உழைத்தேன். என்னை எதற்காக கட்சியை விட்டு நீக்கினர். என்ன தவறு செய்தேன். தொண்டர்களுக்காக போராடினேன். இது தவறாகப் புரிந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலை அப்படியே உறுப்பினர்களாக்கி, கட்சித் தேர்தல் நடத்தியதை ஆதாரத்துடன் கலைஞரிடம் சுட்டிக்காட்டினேன். இதை தலைவர் கண்டித்தார். எனது பிறந்த நாளை யொட்டி பொதுக்குழுவே வருகை என, என்னை பாராட்டி போஸ்டர் அடித்த காரணத்தால் எனது ஆதரவாளர்களை சதி செய்து கட்சியைவிட்டு நீக்கினர்.
ஏன் உனக்கு (ஸ்டாலின்) போஸ்டர் அடிக்கவில்லையா. வருங்கால முதல்வரே என, போஸ்டர்கள் ஓட்டுகிறாகளே. உன்னால் ஆக முடியவில்லையே. மொத்தமாக போஸ்டர்கள் அடித்து வைத்து எப்போது பார்த்தாலும், வருங்கால முதல்வ ரே என, ஓட்டுகிறார்களே. நிச்சியமாக அது கிடையாது. அதற்காக நான் முதல்வராக ஆசைப்படவில்லை. நீ ஒருபோதும் வரவே முடியாது. எனது ஆதரவாளர்கள் நிச்சியமாக வரவிடமாட்டார்கள்.
தலைவரின் மறைவுக்கு முன்பு, மீண்டும் கட்சியில் சேர்க்க, நான் தலைவரை சென்னையில் சந்தித்போது, இவர்கள் ஆட்டம் அடங்கட்டும். கொஞ்ச நாள் பொறுத்திரு, சேர்த்துக் கொள்றேன் என, நம்பிக்கை தெரிவித்தார்.
அதற்குள் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதன்பின், என்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். 7 ஆண்டாக சும்மா இருக்கிறேன். புதிய கட்சி துவங்குவது போன்ற சில கருத்துக்களை இங்கு பேசியவர்கள் வலியுறுத்தினர்.
நல்ல முடிவோ, கெட்ட முடிவோ நீங்கள் ஏற்க வேண்டும். 2016-ல் தேர்தலில் திருவாரூரில் கட்டாயப்படுத்தி தலைவரை நிர்பந்தப்படுத்தி நிறுத்தினர். ஸ்டாலின் முதல்வராகும் ஆசையில் இதைச் செய்தனர். இது போன்ற இன்னும் நிறைய என்னால் சொல்ல முடியும்.
நானே வெளியில் சொல்ல விரும்பவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்கவேண்டும். எதுவானாலும் என்னுடன் இருப்பீர்கள் என, நம்புகிறேன். உங்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.
எத்தனையோ பேருக்கு உழைத்து இருக்கிறேன். மந்திரி ஆக்கினேன். எவருக்கும் நன்றி கிடையாது. கலைஞரால் எல்லோரும் கோடீஸ்வரன் ஆகிவிட்டனர்.
குவாட்டருக்கு ரூபாய் கொடுத்தா இங்கு வந்துள்ளீர்கள். ஸ்டாலினை பார்த்து, கலைஞரை மிஞ்சிவிட்டதாக சமீபத்தில் ஒருவர் பேசினார். அவரை போன்று ஒருவர் இனி மேல் பிறக்கனும், பிறக்கவும் முடியாது. கலைஞர் தான் திமுகவின் உயர்மூச்சு. கலைஞரை மறந்து கட்சி நடத்துகின்றனர். அவரை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். எதுவானாலும் விரைவில் நான் அறிவிக்கலாம். அறிவிக்காமலும் இருக்கலாம். எதையும் தாங்கும் இதயமாக நீங்கள் இருக்கவேண்டும்"
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago