திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

மாணவர்கள் கல்விக்காக வாங்கி இருக்கும் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலிலும் சொன்னதுபோல் இப்போதும் நான் சொல்கிறேன், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு, நிச்சயமாக, உறுதியாக அந்தக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, வெள்ளோடு (சென்னிமலை) ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளோடு ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்” திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:

இங்கே 11 பேர் பேசி இருக்கிறார்கள். கைத்தறி தொழிலில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துச் சில கருத்துகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இலவச மின்சாரம் தந்தது தலைவருடைய ஆட்சிதான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் இன்றைக்கு, கடந்த 39 நாட்களாக, டெல்லியில் இந்தியா முழுவதும் இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், சண்டிகர், ஹரியானா, பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி தலைநகர் நோக்கிச் சென்று கடுங்குளிரிலும் இடைவிடாது ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு மட்டுமல்ல, இங்கு இருக்கும் மாநில அரசும் அதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அந்த 3 வேளாண் சட்டங்களை, கண்மூடித்தனமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதரிக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர்கெட்டு விட்டது என்று சொன்னார்கள். இப்பொழுது அண்மையில், இந்த ஆட்சி ஒரு பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்து, கோடி கோடியாய் அந்த விளம்பரத்துக்கு செலவு செய்து, “மினி கிளினிக்“ ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்லி, தமிழ்நாடு முழுவதும் தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அது மக்களை ஏமாற்றுகிற திட்டம் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். “மினி கிளினிக்“ என்றால் என்ன? கிராமங்களில் தொடக்கநிலையில், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கானவைதான். ஏற்கனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. போகட்டும், மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் நியமித்து விட்டீர்களா? செவிலியர்களை நியமித்து விட்டீர்களா? மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? என்று அந்த திட்டம் தொடங்கும்பொழுதே நான் கேட்டேன். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கிறவர்கள் தான் அங்கு பணி புரிவார்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு, கவுண்டமணி, செந்தில் வாழைப்பழக் காமெடி போல, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோர்தான், மினி கிளினிக்குகளிலும் பணியாற்றுவார்கள் என்று அதுதான் இது என்ற கதையாக பதில் சொல்கிறார்கள். இப்படி ஒரு கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கும் ஆட்சிதான் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்றிணைவோம் வா திட்டம் என்பது திமுகவினருக்கு மட்டும் உதவி செய்தோம் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா கட்சிகளுக்கும், அது பாஜகவாக இருந்தாலும், பாமகவாக இருந்தாலும், அதிமுக கட்சியாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் நமக்கு விரோதிகளாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும், யாராயிருந்தாலும் நம்மைத் தொடர்பு கொண்டால், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மருந்து, மாத்திரைகளை, உணவுகளை, மளிகை பொருட்களை, இத்திட்டத்தின் மூலமாகப் பல நல்ல காரியங்களை செய்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே எந்த கட்சியும் செய்யாத ஒரு திட்டத்தை, திமுக செய்துள்ளது. அதனை எல்லோரும் இன்றைக்குப் பாராட்டுகிறார்கள். வெளிப்படையாகச் சிலரால் பாராட்ட முடியவில்லை. அதிமுகவில் இருந்து, திமுகவிற்கு வந்து சேரவேண்டிய மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. நம்முடைய அணுகுமுறையைப் பார்த்துச் சேர்ந்திருக்கிறார். நம்முடைய செயல்பாடுகளைப் பார்த்து அதனால் அவர் கவரப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

திமுக ஆட்சியில் இல்லை. கடந்த 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாத நேரத்திலும், இவ்வளவு பணிகளை மக்களுக்காக செய்யும்பொழுது, ஆட்சியில் இருந்தால் இன்னும் எவ்வளவு பணிகளைச் செய்வோம் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த ஈரோட்டில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இதே மாவட்டத்தில் அதிமுக கட்சி எம்எல்ஏ ஒருவர் இருக்கிறார். அவர் முன்னாள் அமைச்சர். அவர் பெயர் கே.வி.ராமலிங்கம். அவருக்கு மக்கள் பணி என்றால் பிடிக்கவே பிடிக்காது. ஆளுங்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் தான் மக்களைத் தேடி வர வேண்டும். மக்கள் குறைகளைக் கேட்க வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கேட்டால் கூட செய்ய முடியாது. அவர்கள் தொகுதி நிதியிலிருந்து மட்டுமே செய்ய முடியும். ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் நினைத்தால் செய்யலாம். ஆனால் அவருக்கு மக்கள் பணியில் ஆர்வம் இல்லை. நில அபகரிப்பு, டாஸ்மாக் மாமூல் வாங்குவதுதான் அவருடைய தொழில் என்பது உங்கள் அத்தனை பேருக்கு நன்றாக தெரியும்.

அதனால் தான் ஜெயலலிதா அவர்கள், அவர் அமைச்சராக இருந்த போது பதவியில் இருந்து நீக்கினார் என்பது உங்களுக்கு தெரியும். ஜவுளித்துறையை நம்பி இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களும், ஜவுளி உற்பத்தியாளர்களும் நூல் விலை உயர்வு மற்றும் நூல் தட்டுபாடு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்று இங்கு நான் வந்தவுடன், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். தேர்தல் அறிக்கையில் ‘இதைப்பற்றி நீங்கள் சொல்ல வேண்டும். வரக்கூடிய ஆட்சியில் நீங்கள் இதனைச் செய்து கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை, மனுக்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்.

பஞ்சு விலை உயரவில்லை. ஆனால் நூல்விலை மட்டும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் நூலைப் பதுக்கி வைத்திருக்கக்கூடியவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தம் உருவாக்கப்படும் என்று இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொன்னீர்கள். 100 நாள் வேலை என்பது ஒழுங்காகக் கொடுக்கப்படவில்லை. அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய ஊதியம் முறையாக கொடுக்கப்படவில்லை. அதனால் தான் நாம் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அதனைப்பற்றிக் குறிப்பிட்டு சொன்னோம். இப்போதும் சொல்லப் போகிறேன்.

அந்த 100 நாள் 150 நாட்களாக உயர்த்த யோசனை செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் அந்தக் கூலியையும் உயர்த்தி, அந்தக் கூலியைக் கூட அன்றைக்கே, அங்கேயே அவர்களுக்குக் கொடுப்பதற்கான சூழலை நிச்சயமாக உருவாக்கித் தருவோம் என்ற அந்த நம்பிக்கையை இந்த நேரத்தில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோல ஓய்வுதியம் பற்றி நீங்கள் சொன்னீர்கள். ஓய்வூதியம் என்பது திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்சிப் பாகுபாடு இன்றி, அந்த தகுதி மட்டும் இருந்தால் போதும், அத்தனை பேருக்கும் கொடுத்தோம்.

ஆனால் இப்பொழுது இந்த அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதையெல்லாம் குறைத்து, கட்சிப் பாகுபாடு பார்த்து, அவர்களது கட்சிக்காரர்களை மட்டும் பார்த்து, ஓரவஞ்சனையோடு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை நிச்சயமாக மாற்றப்படும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல மாணவர்கள் கல்விக்காக வாங்கி இருக்கும் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலிலும் சொன்னோம். இப்போதும் நான் சொல்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு, நிச்சயமாக, உறுதியாக அந்தக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக உருவாக்கித் தருவோம்.

குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதி தி.மு.க திட்டங்களைத் தீட்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், திமுக குரல் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய ஆட்சியை பொறுத்தவரைக்கும், கரப்ஷன், கமிஷன், கலெக்சன், இதைத்தான் கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகளை வஞ்சிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களைத் தாகத்தில் தவிக்கவிட்டு இருக்கிறது இந்த ஆட்சி. சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டு விட்டது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். கஜானாவை சுரண்டி காலிசெய்து, கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி ரூபாய் கடனை உருவாக்கி வைத்திருக்கக் கூடிய நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

கல்வியையும், சுகாதாரத்தையும் தரமிழக்கச் செய்திருக்கிறது. பெண்களின் உரிமையைப் பறித்து விட்டது. சமூகநீதியை உருக்குலைத்து வைத்திருக்கிறது. ஆளுமையற்ற ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ப்பெருமையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்