விவசாயிகள் உற்பத்திப்பொருட்களை அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் திட்டம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

வருங்காலத்தில் விவசாயிகள் எதிர்பார்ப்பதை போல இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் நிலை உருவாகும். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை அரசாங்கமே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சிந்தித்துக்கொண்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

விவசாயிகள் என்று சொன்னாலே உழைப்பாளிகள் என்று பொருள். உழைக்க பிறந்தவர்கள் விவசாயிகள். யாரையும் எதிர்பாக்காமல் சொந்த காலில் நிற்பவர் விவசாயி மட்டுமே. உழைத்து அதில் வருகின்ற வருமானத்தை வைத்து வாழ்கின்ற மனிதர் நம்முடைய விவசாயி தான். இன்றைக்கு அந்த விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சனைகள், அதனை எப்படி களைவது என்பதை எங்களுடைய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

விவசாயம் என்று சொன்னாலே அதற்கு நீர் தேவை. பருவமழை சரியாக பெய்தால் தான் பயிர் நல்ல விளைச்சலை தரும். பட்டத்திற்கு ஏற்றவாறு எந்த பயிரை சாகுபடி செய்வது என்பதை எல்லாம் விவசாயிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள். விவசாயத்திற்கு தேவையான நீரை எங்களுடைய அரசு சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம்.

இத்திட்டம் விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்ற திட்டம். பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து, ஒரு சொட்டுநீர் கூட வீணாக கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமித்து வேளாண் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும், குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்திருக்கின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகள், குளங்களை தூர் வாரி கொண்டிருக்கிறோம். பல நதிகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் வீணாகாமல் தேங்கி நிற்பதற்காக தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கத்தை உண்டாக்கி விவசாய பெருமக்களுக்கு தேவையான நீரை தந்து கொண்டு இருக்கிறோம்.

வறட்சி வந்தால் வறட்சி நிவாரணம் கொடுக்கிறோம். பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இழப்பீட்டுத் தொகை பெற்று தருகிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இழப்பீட்டு தொகையை அதிகமாக பெற்று தந்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 9400 கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டுத் தொகையாக பெற்று தந்த அரசு தமிழக அரசு.

அதேபோல புயல் மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம், நிவாரணங்களை வழங்குகிறோம். இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் எல்லாம் இவ்வாறு உதவி செய்தது கிடையாது. விவசாய பெருமக்கள் எப்பொழுது எல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்பொழுது எல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக அம்மாவின் அரசு காத்து நிற்கிறது.

நான் அமெரிக்காவில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற போது, அங்கே ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் தருகிறது. அதேபோல், இங்குள்ள நம் விவசாயிகளுக்காக நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த, அதிக அளவில் பால் தருகின்ற கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க இருக்கின்றோம்.

அதேபோல், இப்பகுதியில் ஆடு வளர்ப்பு அதிகமாக இருக்கின்றது. இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் அதிக எடை கொண்ட கலப்பின ஆடுகளை உருவாக்க இருக்கின்றோம். இதன்மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமான கிடைக்கின்ற வாய்ப்பை பெறுகின்றார்கள். அதோடு இந்த ஆராய்ச்சி நிலையத்தில், மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற முறைகளை விவசாயிகளுக்கு கற்று தந்து, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்கின்றோம்.

விவசாயிகள் தங்களுக்கு என்ன கன்று வேண்டுமோ, கிடாரி கன்று வேண்டும் என்றால் கிடாரி கன்று, காளை கன்று வேண்டும் என்றால் காளை கன்று வழங்குவதற்காக ஊட்டியில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விந்து ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்ல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு சிறந்த விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக திண்டிவனத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா ஒன்று உருவாக்கி வருகிறோம்.

விவசாயிகள் அதிக அளவில் காய்கறி, பழங்களை உற்பத்தி செய்கின்ற போது, அப்பொருளின் விலை வீழ்ச்சியடைந்து, விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் தலா 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் விற்பனையாகவில்லை என்றால், இந்த குளிர்பதனக் கிடங்கில் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மாதகாலம் வரை அப்பொருட்கள் கெடாமல் இருக்கும். நல்ல விலை கிடைக்கும் போது, அப்பொருட்களை விற்க முடியும். அதுமட்டுமல்லாமல், விற்பனை செய்யப்படும் அந்தப் பொருட்களுக்கு உடனேயே அவர்களது வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். இடைத்தரர்கள் யாரும் கிடையாது. தமிழகத்தில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகும் இடங்களில், இந்த குளிர்பதனக் கிடங்குகள் விரைவில் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு விவசாய தொழிலாளர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று குழந்தையை வளர்ப்பது போல எங்கள் அரசு விவசாயிகளை பாதுகாத்து வருகிறது. விவசாயிகளின் தானியங்களை சேமித்து வைப்பதற்காக கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சேமிப்பு கிடங்குகளை அமைத்து தந்திருக்கிறோம்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றமைக்காக ஆண்டு தோறும் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் நாள் வழங்கப்படும் விருது இந்தாண்டு முதல் நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கப்படும் என்று நான் அறிவித்திருக்கின்றேன்.

விவசாயிகளை போற்றி புகழக் கூடிய அரசு அதிமுக அரசு. உழைக்கின்ற வர்க்கத்தை மதிக்கின்ற அரசு தமிழக அரசு. எப்பொழுது எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் நாங்கள் ஓடோடி வந்து உங்களுக்கு துணை நிற்போம் என்பதை இந்த தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்காலத்தில் விவசாயிகள் எதிர்பார்ப்பதை போல இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் நிலை உருவாகும். இதற்கு நான் சிந்தித்து கொண்டு இருக்கின்றேன். அதாவது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை அரசாங்கமே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது”.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்