தேனி மதிகெட்டான் சோலை வனப்பகுதியை பாதுகாப்போம்; நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது: வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு


டாட்டா அறிவியல் ஆராய்ச்சி மையம் நியூட்ரினோ திட்டத்துக்காக மதிகெட்டான் சோலை வனப்பகுதியின் எல்லையைச் சுறுக்கி குறுக்கு வழியில் அனுமதி பெறும் முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்ககூடாது. வனப்பகுதியை இரு மாநில அரசுகளும் பாதுகாக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை வனப்பகுதியை, கேரள அரசு கடந்த 2003-ம் ஆண்டுதேசியப் பூங்காவாக அறிவித்தது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லையானது தமிழக கேரள எல்லையாகவும் உள்ளது.

தற்போது இந்தப் பூங்காவை மேலும் பாதுகாக்கும் நோக்கத்தில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய சுற்றுச்சூழல் துறை பூங்காவின் கிழக்கு எல்லையைத் தவிர்த்து 1 கிமீ தொலைவிற்கான மற்ற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது.

இது தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. இது வன்மையானக் கண்டனத்துக்கு உரியது.

இத்திட்டற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வெறும் கட்டுமானத்திற்கான அனுமதி பெறும் B வகைப்பிரிவில் பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2017-ம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் இருந்து நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள இடம் 4.9 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் இத்திட்டத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை A பிரிவில் தான் தர வேண்டும் என்று கூறி சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்திருந்தது.

அதன் பின்னரும் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகக் கருதி, மாநில சுற்றுச்சூழல் வல்லுனர் குழு பரிசீலனைக்கு இத்திட்டத்தை வைக்காமல், மத்திய சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனையில் வைத்து பெறப்பட்ட அனுமதியை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் வழக்குத் தொடரப்பட்டது. இத்திட்டத்திற்கு தேசிய வனஉயிர் வாரிய அனுமதி அவசியம் என 2018-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்ட மதிகெட்டான் சோலையிலிருந்து 4.9 கிலோமீட்டர் தொலைவில் அமைய இருக்கும் இத்திட்டத்திற்கு தேசிய வன உயிர் வாரிய அனுமதி அவசியம்.

ஆனால், டாட்டா அறிவியல் ஆராய்ச்சி மையம் இந்த அனுமதியைப் பெறாமலேயே திட்டத்தைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான செயலாகும்.

கேரளா அரசு தனது மாநில எல்லையில் இருக்கும் ஒரு தேசியப் பூங்காவை அதன் சுற்றுச்சூழல் நலன் கருதி பாதுகாக்க முயற்சி செய்கையில், அந்த தேசியப் பூங்காவின் அனைத்து எல்லைகளைப் பாதுகாப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும். மத்திய சுற்றுச்சூழல் துறை ஒரு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை பல்லுயிரியம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக (Eco-Sensitive Zone) அறிவிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில், தேசிய பூங்காவில் இருக்கும் ஒரு பகுதியை அதன் எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டர் வரைக்கும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேரள அரசு, தனது மாநிலப் பகுதிகளில் 1 கிமீ தூரத்திற்கு மட்டுமே சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக நிச்சயமாக மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை பாதுகாக்க முடியாது.

நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தும்போது கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்படும் சுரங்கம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களால் நிச்சயமாக மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.

தனது மாநில கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதற்காக மதிகெட்டான் சோலைக்கு அருகே உள்ள வனப்பரப்பை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க முடியாது என்கிற தமிழக அரசின் வாதமும் தவறானது.

மாநில எல்லைகளில் அமைந்திருக்கும் பாதிக்கப்பட்ட பகுதியை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவிப்பதில் இரண்டு மாநிலங்களுக்குமே பொறுப்பு உள்ளது. மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம், நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்வதற்கு கட்டுமான அனுமதி (Building clearance) மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி ஆகியவற்றை பெற்றால் மட்டுமே போதுமானது என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்க முடியாதது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் கருதியும், தமிழ்நாடு போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணையின் மீதான உரிமை கருதியும் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன்”.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்