நீலகிரியில் மூன்று பகுதிகளில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்; 1,232 பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பயிற்சி

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.

உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமை இன்று (ஜன. 02) தொடங்கி வைத்து, களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

மேலும் தடுப்பூசி செலுத்தியபின், அவர்களை கண்காணிப்பு அறையில் கண்காணிப்பது உட்பட பணிகளையும் பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவிட் - 19 நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் கோவிட் - 19 நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த 5,732 மருத்துவர்கள் செவிலியர்கள், களப்பணியாளர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி முதல்கட்டமாக வழங்கப்பட உள்ளது. இவர்களின் விபரங்கள் கோவின் இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது.

கோவிட் - 19 தடுப்பூசி வழங்க நீலகிரி மாவட்டத்தில் 823 தடுப்பூசி வழங்கும் மையங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. இதில், 1,232 தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் பட்டியலிடப்பட்டு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்படவுள்ளது. இன்று 3 இடங்களில் நடைபெற்ற கோவிட் - 19 தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்வில், ஒரு மையத்தில் 25 நபர்கள் வீதம் 75 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்ட தடுப்பூசி அலுவலர், தடுப்பூசி வழங்கும் இடம், வழங்குபவர் மற்றும் கோவிட் - 19 தடுப்பூசி ஆகியவை கோவின் இணையதளம் மூலமாக செயல்படுத்துவதோடு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர். ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலர், பயனாளிகளை சரிபார்ப்பவர், தடுப்பூசி வழங்குபவர், கண்காணிப்பாளர்கள் என 5 நபர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பயனாளியும் முகாமுக்கு வரும்போது அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளியின் அடையாள அட்டையை சரிபார்த்தவுடன் காத்திருப்போர் அறையில் அமர்த்தப்படுவார். பின்னர், பயனாளிகளை சரிபார்ப்பாளர் பயனாளிகளின் விபரங்களை கோவின் இணையதளத்தில் சரிபார்த்தவுடன் தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி வழங்கியவுடன் கோவின் இணையதளத்தின் தடுப்பூசி பெற்ற நிலையை பதிவு செய்யப்படும். மேலும், 30 நிமிடங்கள் கண்காணிப்பாளர் அறையில் கட்டாயமாக காத்திருக்க வைத்து கண்காணிக்கப்படுவார்கள்.

இந்த காத்திருப்போர் அறை மற்றும் கண்காணிப்பாளர் அறையில் கோவிட் - 19 தொற்று நோய் குறித்த தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், இந்த ஒத்திகை முடிந்தவுடன் அதன் அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

நிகழ்வில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, உதகை அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹிரியன் ரவிகுமார் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்