காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வரின் முறையீட்டை ஏற்பீர்: பிரதமருக்கு வைகோ கடிதம்

தமிழகத்துக்கு உரிய நீதி வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

அதில், காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வர் முன்வைத்துள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து, ஏழரைக் கோடி தமிழக மக்களின் புரிதலையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் முறையீடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று தொலைநகலில் அனுப்பிய கடிதம்:

"இந்தியாவின் ஜனநாயக தத்துவத்தை மேலோங்கச் செய்ய கூட்டுறவு கூட்டாட்சியே உகந்தது என்று நாடாளுமன்றத்தில் சங்கநாதம் செய்தீர்கள்.

தமிழக மக்களுக்கு மிகுந்த கவலை தருகின்ற முக்கியத்துவம் வாய்ந்த காவிரி பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, நீதி வழங்கிட வேண்டி உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கு தடையற்ற காவிரி நதிநீர் உரிமையை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அனைத்துலக நாடுகள் ஏற்றுக்கொண்ட விதிகளின் படி தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் காவிரி நீர்ப்பாசன உரிமையை தமிழகம் சட்டபூர்வமாக பெற்றிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தோடு எழுந்த காவிரி நதிநீர் பிரச்சினையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், 'மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்று ஆணையிட்டதன் பேரில் 1990 ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் 1991 ஜூன் மாதம் 25 ஆம் தேதி இடைக்கால ஆணை பிறப்பித்தது.

இந்திய அரசியல் சட்டத்தின் நெறிகளை காற்றில் பறக்கவிட்டு, ஒரு மாத காலத்துக்குள் 1991 ஜூலை 25 இல் நடுவர்மன்ற இடைக்கால ஆணையை முற்றிலும் நிராகரித்து கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிரகடனம் செய்தது. இச்செயல் இந்தியாவில் எந்த மாநிலமும் அதுவரை செய்ய முற்படாத அரசியல் சட்டத்துக்கு விரோதமானதும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானதுமான செயல் ஆகும்.

இதனால்தான் உச்ச நீதிமன்றம், கர்நாடக அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கூறி, 'அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்றும், நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை சட்டபூர்வமானது என்றும், மத்திய அரசு அதை அரசிதழில் வெளியிட வேண்டும்' என்றும் தீர்ப்பளித்தது. அதன்படி நடுவர் மன்றத்தில் இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டது.

இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக அரசின் நியாயமற்ற சட்ட விரோதமான போக்கினை வெளிப்படுத்தி, மறுக்க முடியாத விளக்கங்களோடு உங்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் உங்கள் முன் வைத்துள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து ஏழரைக் கோடி தமிழக மக்களின் புரிதலையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் முறையீடாகும். இதில் தமிழக அரசின் கருத்துக்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் 7ஆவது 8ஆவது அத்தியாயங்களில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள பகுதிகளை உங்களின் உடனடி கவனத்துக்கு உரியவை ஆகும்.

8ஆவது அத்தியாயத்தில் காவிரி நடுவர் மன்றம் திட்டவட்டமாக பின்வருமாறு தெரிவிக்கிறது. "நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த உகந்த செயலாக்கும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பு நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையேல் எங்கள் தீர்ப்பு வெறும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கும் என அஞ்சுகிறோம்."

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரியில் கர்நாடகம் தேவையான தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் காவிரிப்படுகை விவசாயிகள் மிகப்பெரிய இழப்புகளுக்கும், துன்பத்துக்கும் ஆளாகி உள்ளனர்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் கண்ணீரில் தவிக்கின்றனர். ஐந்து இலட்சம் ஏக்கர் நிலங்கள் குறுவை சாகுபடியை இழக்க நேரிடும்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மக்களுக்கு நீதி வழங்க வேண்டுகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்