மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிமுக அரசு என்றும் துணை நிற்கும். பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அரசு, அதிமுக அரசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 31) திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது காவல்காரன்பட்டியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:
"திருச்சி மாவட்டத்தில் 9,933 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 2,082 குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு குழுக்களும் செயல்படுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலே, பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும், வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கப்பட்டது.
» தமிழகத்தில் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு; தளர்வு, தடை முழு விவரம்
கரோனா நோய்த்தொற்று காலத்தில் வங்கி இணைப்புக் கடனாக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளின் மூலமாக கடன் வழங்கி இருக்கின்றோம். ஜெயலலிதா பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், மகளிர் சுய உதவிக் குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டுதான் செல்வார்.
ஜெயலலிதா மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீது தனி அக்கறையும் பாசமும் கொண்டிருந்தார். தமிழக அரசும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீது தனி மரியாதை கொண்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று நான் ஆய்வு செய்தபோது, மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகளுடன் நேரடியாக அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன்.
திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து, ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, மகளிர் சுய உதவிக் குழுவினரோடு ஆலோசனை நடத்தி, அரசின் மூலமாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தோம்.
ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை இன்றைக்கு தமிழக அரசு நிறைவேற்றி வருவதோடு, பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவப் படிப்பைப் பயில வேண்டும் என்பதற்காக தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
நான் கிராமத்தில் பிறந்தவன். அதனால் கிராம மக்களின் தேவையை நன்கு அறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறேன். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 313 அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன, இதன் மூலம் 1,650 புதிய மருத்துவப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக 130 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கிடைக்க உள்ளன. இதனால், அடுத்த ஆண்டு முதல் 443 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு தமிழக அரசு.
அதேபோல, பல் மருத்துவம் பயில 150 ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். ஏழை எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகள் மருத்துவர்களாக ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம்.
இன்றைக்கு நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 12 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் அந்தப் பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஏழை எளிய மக்களுக்காகத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தினார்கள். அந்த வழியில் தமிழக அரசும், ஏழை எளிய மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.
தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வருகின்ற 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் உங்கள் இல்லங்களுக்கே வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பைப் பெற்று மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வேண்டும். ஆனால், ஸ்டாலினால் ஏழை மக்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த 2,500 ரூபாயை அரசு யாருக்கு வழங்குகிறது. ஏழை எளிய மக்களுக்கு வழங்குகிறது. அந்த ஏழை எளிய மக்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவதில் என்ன தவறு. ஏன் இதைத் தடுக்க நினைக்கிறார் ஸ்டாலின். அவர் எவ்வளவு முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அதை அனைத்தையும் தமிழக அரசு முறியடிக்கும்.
கரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களைக் கொடுத்த ஒரே அரசு, இந்தியாவிலேயே எங்களுடைய அரசுதான்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததை தமிழக அரசு உயர்த்தி, தற்போது 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று செயல்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழக அரசு, 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தைச் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஏழை எளிய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், தாலிக்காக வழங்கப்பட்ட நான்கு கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து, தற்போது 1 பவுன் தங்கம் சுமார் 37 ஆயிரம் ரூபாயாக உள்ளது, அதனையும் வாக்குறுதி அளித்தப்படி வழங்கி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.
ஆனால், திமுக 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் யாருக்கும் நிலம் வழங்கவில்லை. நிலத்தை வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்களுடைய நிலத்தை அவர்கள் அபகரிக்காமல் இருந்தாலே போதும். எங்கேயாவது விலைமதிப்புமிக்க நிலம் இருந்தால் போதும், அது உடனடியாக திமுகவினரால் அபகரிக்கப்பட்டது. அதனால்தான் ஜெயலலிதா திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்த்தார்.
குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லாச் சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், புத்தகங்கள், மிதிவண்டிகள் போன்றவற்றை வழங்கினார். விஞ்ஞானக் கல்வி பெறுவதற்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற மாணவர்களோடு போட்டிபோட்டு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினியை 52 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி, பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒருசொட்டு நீர் கூட வீணாகக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பொதுப்பணித் துறை கீழ் உள்ள ஏரிகள், குளங்கள், உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் தூர்வாரப்படும் என்று அறிவித்து, பொதுப்பணித் துறை மூலமாக குடிமராமத்து திட்டத்தைச் செயல்படுத்தி 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டது. அப்படித் தூர்வாரப்படும்போது விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து சென்று அடி உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைக்கு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உழைக்கும் திறனற்ற முதியவர்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு, இன்றைக்கு சுமார் 90 சதவிகிதம் முதியவர்களுக்குக் கொடுத்துள்ளோம்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு நிறைவேற்றினோம். தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 9 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
திமுக ஒரு அராஜக கட்சி, ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று பெண் ஒருவரைத் தாக்குகிறார். திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் நீங்களே எண்ணிப் பார்க்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிமுக அரசு என்றும் துணை நிற்கும். பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அரசு, அதிமுக அரசு. அப்படிப்பட்ட அரசு தொடர்வதற்கு உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்கிட வேண்டும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago