தமிழகத்தில் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு; தளர்வு, தடை முழு விவரம் 

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு ஜன.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக அளிக்கப்பட்ட தளர்வுகள் தவிர, வேறு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம், பாதுகாப்பு நடைமுறைகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும், மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து, நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்குக் கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000-ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 31.12.2020 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய்ப் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் எடுத்த முடிவு வருமாறு.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

2) திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3) நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளைப் பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

* புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு (E-registration) முறை தொடரும்.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

மேலும், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாகத் தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாகத் தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பல்வேறு தளர்வுகளுக்குத் தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைப்பிடிப்பதைச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்