ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தி நிந்திக்காமல் ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறுக: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

முதல்வர் அளித்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் என அனைத்தையும் பாதிக்கச் செய்யும் வகையில் துரோகம் இழைப்பது மாபாதகச் செயல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 31) வெளியிட்ட அறிக்கை:

"பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து விட்டு, மீண்டும் வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே கொண்டுவர வேண்டும்' என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வைத்துப் போராடிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல் இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாததால், 22.1.2019 அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடங்கினார்கள்.

அப்போது, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தரம் தாழ்ந்த காரியத்தை மட்டுமே அதிமுக ஆட்சி செய்தது. இந்நிலையில், 'வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று முதல்வர் பழனிசாமி, உள்ளே நஞ்சை வைத்து வெளியே நயமாக, வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டு கரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றி வரும் 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீழ் குற்றக் குறிப்பாணைகள் வழங்கி பேரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.

அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியது, அரசு ஊழியர் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு நிதி, அரசு ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்கியது, ஈட்டிய விடுப்பைச் சரண் செய்தால் பணம், திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்டக் கடன் அளித்தது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கியது, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது, 2 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் அளித்தது, 10 ஆயிரம் சாலைப்பணியாளர்களையும், 7,000 மக்கள் நலப்பணியாளர்களையும் நியமித்தது, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திப் பணி மாறுதல்கள் வழங்கியது, ஆசிரியர்கள் நியமனம் எனத் திமுக ஆட்சிதான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்வு தந்த ஆட்சி.

அரசு ஊழியர்களை நள்ளிரவில் அதிமுக ஆட்சி கைது செய்து, ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த போது அவர்களைக் காப்பாற்றும் அரணாக அன்றும் இன்றும் நிற்பது திமுக.

ஆனால், 'போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்' என்று ஒரு முதல்வரே வேண்டுகோள் விடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, அவர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. இது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை; பணி ஓய்வும் கிடைக்கவில்லை. பணி ஓய்வுக்குப் பின் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஏன், அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கூட கிடைக்கவில்லை.

ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும், அடுக்கடுக்காகத் தொடர்ந்து இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி, முதல்வர் பழனிசாமி எதைச் சாதிக்கப் போகிறார்? அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, போராட்டத்தை விலக்கிக் கொண்ட அரசு ஊழியர்களை முதுகில் குத்தி இப்படி துரோகம் இழைத்துக் கொடுமைப்படுத்துவது மன்னிக்க முடியாத மாபாதகம்.

எனவே, கரோனா பேரிடருக்காக தங்களின் ஒரு நாள் ஊதியமாக 150 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அளித்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தி நிந்திக்காமல், ஏற்கெனவே வாக்குறுதி அளித்தவாறு, 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்