மன்னர் ஆட்சி போல குடும்பத்துக்காக மட்டுமே ஸ்டாலின் கட்சி நடத்துகிறார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

மன்னர் ஆட்சி போல குடும்பத்திற்காக மட்டுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நடத்துகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.30) நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற கொல்லிமலை மலைவாழ் மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் அலங்காநத்தம் பிரிவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதாவது:

"எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருக்கின்ற காலத்திலே மலைவாழ் மக்களுக்குப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினார்கள். குறிப்பாகச் சொன்னால் மலையிலே வாழ்கின்ற மக்களுக்குப் பாதை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். இது ஒரு கடினமான பணி, ஏனென்று சொன்னால் பாதை அமைக்க வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் பாதை அமைக்க வேண்டியுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளாக இருக்கிறது என்று சொன்னால் மாநில அரசே அந்தப் பணியை முடித்துவிடும். அதற்கு மேலாக இருந்தால் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அதோடு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது வழியில் வந்த தமிழக அரசு இன்றைக்கு கொல்லிமலை மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் இருக்கின்ற மலைவாழ் மக்களுக்குப் பாதை வசதி அமைப்பதைப் பிரதானமாக எடுத்துக்கொண்டு நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோல, மலைவாழ் மக்கள் வாழ்கின்ற மின்சாரம் அற்ற கிராமங்களைக் கண்டறிந்து அங்கு மின்சார இணைப்பு கொடுக்கும் பணியினையும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். மின்சார வசதி செய்து கொடுக்க இயலாத இடங்களில் எல்லாம் சோலார் விளக்குகளை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இங்கு கூட சோலார் விளக்குகள் அதிகமாக அமைக்கக் கோரிக்கை விடுத்தீர்கள், எந்தெந்த இடங்களில் சோலார் விளக்குகள் அமைக்க முடியுமோ அங்கெல்லாம் சோலார் விளக்குகளை அரசு அமைக்கும்.

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால், இந்த சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலே ரூ.8.50 கோடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதனை நானே வந்து திறந்து வைத்தேன். இன்றைக்கு இரண்டு மலைவாழ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இருவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல மலைவாழ் மக்களுக்காகப் பள்ளிகளையும் நாங்கள் தொடங்கியிருக்கின்றோம்.

இங்குமட்டுமல்ல சேலம் மாவட்டம் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற இடங்களில், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்தப் பள்ளிகளை நாங்கள் திறந்து வைத்துள்ளோம். இந்தச் சமுதாய மக்கள் மற்றவர்கள் போல பொருளாதாரத்திலே சமநிலையைப் பெற வேண்டும், கல்வியிலே உயரவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இங்கே செல்போன் டவர் இல்லாத காரணத்தினாலே, குழந்தைகள் இணையவழியில் கல்வி கற்க இயலாத சூழ்நிலை இருப்பதாக இங்கு குறிப்பிட்டார்கள். இங்கு செல்போன் டவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

நாமக்கல் முதல் சேந்தமங்கலம் வரையிலான சாலைப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. அந்தப் பணியும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு வரும்.

பெரும்பாலான மலைவாழ் மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்குச் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி என அடிப்படை வசதிகளையும் படிப்படியாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். விடுபட்ட பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

2021-ல் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வர இருக்கின்றது. எம்ஜிஆர் காலத்திலும் இந்த மலைவாழ் மக்கள் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகதான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் இந்த மலைவாழ் மக்கள் சட்டப்பேரவைத் தொகுதி ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக இருந்தது. இங்கே கொல்லிமலை, ஏற்காடு என இரண்டு மழைவாழ் மக்கள் சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. மீண்டும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலே அதிமுக வெற்றி பெற நீங்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

இதையடுத்து, அலங்காநத்தம் பிரிவில் அவர் பேசியதாவது:

"கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், அவர்களின் கனவினை நனவாக்கும் வகையில் தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளது. தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக் நகர்ப்புற முதல் கிராமம் வரை ஏழை, எளிய மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலே திறந்து வைத்து தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 10 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்குட்பட்ட கிராமப்புறச் சாலைகள் ரூ.28 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

ஏழை, எளிய மாணவர்கள் உலத்தரம் வாய்ந்த கல்வி பெறும் வகையில் காலணி முதல் கணினி வரை விலையில்லாமல் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தமிழ்நாட்டில் அதிக அளவில் கல்லூரிகளைத் திறந்த காரணத்தினால் இந்தியாவிலே உயர்கல்வி பயில்வோரில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. முதியோர் நலன் கருதி 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம், ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்காக தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் 1/2 பவுன் தங்கம் 1 பவுனாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று எண்ணற்ற திட்டங்களினாலே, அதிமுக ஆட்சியில் தமிழகம் கல்வி, மருத்துவம், தொழில்துறை என அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் வரவில்லை எனக் குறை கூறிவருகிறார். குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக, மன்னர் ஆட்சி போல குடும்பத்திற்காக மட்டுமே கட்சி நடத்துகிறார் ஸ்டாலின். அவர்களுக்கு வருகின்ற 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்.பி., எம்எல்ஏ ஆக முடியும். ஏன் முதல்வராக கூட வரமுடியும். மக்களுக்காக உழைக்கின்ற கட்சி அதிமுக வருகின்ற 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலிலே அதிமுகவை மாபெரும் வெற்றி பெறச் செய்ய இரட்டை இலை சின்னத்திலே வாக்களிப்பீர்.

பொதுமக்கள் அரசாங்கத்தை நாடிச் சென்றதை மாற்றி மக்களைத் தேடி அரசாங்கம் என்ற அடிப்படையில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயலபடுத்தப்பட்டது. இன்றைக்கு தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருகின்றனர். இதன் மூலம் சுமார் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கரோனா காலத்திலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே நான் மட்டும்தான்.

2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வர இருக்கின்றது, பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி, மீண்டும் அதிமுக ஆட்சி தொடர அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்