திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க ரஜினியைப் பயன்படுத்த பாஜக அழுத்தம் கொடுத்தது: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்றுள்ள கே.எஸ்.அழகிரி, ரஜினிகாந்துக்கு பாஜக அதிக அழுத்தம் கொடுத்தது. அதிமுகவைக் காப்பாற்ற பாஜக எடுத்த முடிவு அது. ரஜினி அரசியலுக்கு வந்திருந்தாலும் தோல்வியைச் சந்தித்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டதாக அறிவித்தது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

“என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கற்ற பாடம் என்னவென்றால் ரஜினியைப் போன்ற மனநிலை கொண்டவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க முடியாது, விரும்பவும் மாட்டார்கள். அதற்கு மகாத்மா காந்தியை உதாரணமாகச் சொல்லலாம்.

பெரியார் மதரீதியான ஆன்மிகம் இல்லாத நிலையில்கூட, அவரும்கூட மதம் சாராத ஒரு தீவிரவாதி. அவரும் ஒருவகையில் தீவிரவாதி. அதனால்தான் அவர் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கவில்லை.

இதே நிலைதான் 1996-ல் ரஜினிக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவரைக் கட்சி ஆரம்பிக்கச் சொன்னபோது அவர் மறுத்தார். இதைவிட மிக பிரபலமாக இருந்தார். உடல்நலனும் நன்றாக இருந்தது. ஏறக்குறைய ஆரம்பித்திருந்தால் அவருக்கு வெற்றி வாய்ப்புகூட கிடைத்திருக்கும். அவர் அன்றைக்கு என்ன நினைத்தார் என்றால், கருணாநிதியும், மூப்பனாரும் சேர்ந்து ஒரு தேர்தல் அரசியலில் இணைந்து ஜெயலலிதாவைத் தோற்கடிக்கவேண்டும் என்பதில்தான் அவர் உறுதியாக இருந்தார்.

ஆகவே, அவருக்கு அளித்த உத்தரவாதங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவருக்கு அப்போதே அந்த எண்ணம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சொன்னதுபோன்று பாஜக அவருக்கு அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. அவர்களுடைய நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது.

இந்த முறை திமுக கூட்டணியைத் தோற்கடித்திருந்தால் அதிமுகவைக் கையில் வைத்துக்கொண்டு பாஜகவின் நேரடி ஆட்சியை தமிழகத்தில் நடத்த முடியும் என்று நினைத்திருந்தார்கள். அவர்களுடைய ராஜதந்திரிகள் அந்த ஆலோசனையைத்தான் வழங்கினார்கள். அதன் விளைவுதான் ரஜினிகாந்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அவர் வரமாட்டார் என்பதில் நேற்றும் நான் உறுதியாகச் சொன்னேன். அவர் வந்திருந்தாலும் வெற்றி பெற முடியாது. பொதுமக்கள் அவரை மாற்றாகப் பார்க்கவில்லை. அவர் மாற்றாக இருக்கவும் முடியாது என்பது தெளிவு. ஏனென்றால் பாஜக-ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை.

மவுனம் காத்தார், சமரசம் மேற்கொண்டார். எனவே தமிழக மக்களிடம் அவருக்கான மரியாதை குறைந்தது. அல்லது நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. எனவே அவர் வரமாட்டார் என்பது உண்மை. அது இன்றைக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது. வந்திருந்தாலும் திமுக-காங்கிரஸ் அதாவது மதசார்பின்மைக் கூட்டத்தை அவரால் வெற்றிகொள்ளவே முடியாது.

அதிமுகவைக் காப்பாற்ற பாஜக செய்த முயற்சிகள் தோற்றுப்போய்விட்டன. எனவே, தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இரண்டாவதாகக் கிடைத்த பலத்த அடி. தனி மனிதர்களை மையமாக வைத்து இன்றைய தமிழக அரசியல் இல்லை. 1996-ல் ரஜினி மற்றவர்களுக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இன்றைக்கு மதச்சார்ப்பற்ற கொள்கையைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வளர்ச்சி வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்த இரண்டுமே ரஜினிகாந்துக்கு ஏற்புடையது அல்ல. அவரால் அதைச் சாதிக்க முடியது. 1996-ல் இருந்த ரஜினிகாந்தின் செல்வாக்கு இப்போது இல்லை. நிறைய புது நடிகர்கள் வந்துவிட்டார்கள். தன்னுடைய பொலிவை அவர் இழந்துவிட்டார். அரசியல் ரீதியாகவும் அவரிடம் மறுமலர்ச்சி இல்லை. கவர்ச்சி ரீதியாகவும் இல்லை. நல்ல நடிகர், நல்ல மனிதர்.

அவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கும். எனக்கும்கூட அவரை மிகவும் பிடிக்கும். ஆனால், இன்றைய அரசியல் அவருக்குப் பொருந்தாது. கொள்கை ரீதியான அரசியல்தான் இன்றைக்கு எடுபடும். அதனால்தான் அவரால் வெற்றிபெற முடியாது என்று சொன்னேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்