விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போலீஸாருக்குக் கூடுதல் பயிற்சிகள்: எஸ்.பி. விஜயகுமார் தகவல்

By ந.சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தனித்திறனை வெளிப்படுத்தக் கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படும் என எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெத்தூர் பகுதியில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

இதில், திருப்பத்தூர் மாவட்டக் காவலர்கள் முதல் பரிசினைத் தட்டிச்சென்றனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர் அணியினருக்கு வெகுமதி அளித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் காவல்துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தப் போட்டிகளில், பொதுமக்களுடன் திருப்பத்தூர் மாவட்டக் காவல் அணியினர் பங்கேற்பார்கள். அதற்காக ஒவ்வொரு போட்டிக்கும் தனி அணி உருவாக்கப்படும். போட்டியில் காவல்துறை அணியினர் தனித்திறனை வெளிப்படுத்தக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.

மாவட்டக் காவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளை ஆயுதப்படை மைதானத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, தடகளம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்குச் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு காவல் அணி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெறும் காவலர்களுக்குப் பணியில் சிறப்பு அந்தஸ்து வழங்கவும் ஆலோசிக்கப்படும். ஒவ்வொரு காவலரும், பணி நேரம் போக ஓய்வு நேரங்களில் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுப் போட்டிகளைத் தேர்வு செய்து முறையான பயிற்சிகளைப் பெறலாம். பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் இனி காவல்துறையினரும் கலந்துகொண்டு விளையாடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் நல்லுறவு ஏற்படும்’’ என்று எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, திருப்பத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, காவல் ஆய்வாளர் பழனி, உதவி காவல் ஆய்வாளர் அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE