நான் ஆளுநரிடம் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகள் எதையாவது ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள் மறுக்க முடிந்ததா?-ஸ்டாலின் கேள்வி 

By செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார் கொடுத்துள்ளோம். அதனையும் ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் யாராவது மறுப்பு சொல்லி இருக்கிறார்களா? ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசியதாவது:

“கடந்த 22ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் மயிலாடுதுறையைச் சேர்ந்த அ.அப்பர் சுந்தரம் என்பவரின் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. 'அடிக்கல் நாட்டியது போதும்' என்பது அதற்கு தலைப்பு. புதிய புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி வருகிறார். அதை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே அடிக்கல் நாட்டி நிறைவேற்றப்படாத திட்டங்களைச் செய்து முடியுங்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

மயிலாடுதுறையிலேயே ஏராளமான திட்டங்கள் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, இன்னும் செய்து தரப்படவில்லை என்று அப்பர் சுந்தரம் சொல்லி இருக்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு தொகுதி மக்களும் சொல்கிறார்கள்!

சும்மா அறிவிப்பது. அதனை அப்படியே கிடப்பில் போடுவது. இதுதான் அதிமுக ஆட்சி. இது எதுவும் மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். மக்களை ஏமாற்றுகிறோம் என்ற பெயரால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

திருக்குவளை என்ற கிராமத்தில் இருந்து கிளம்பிய ஒரு இளைஞனுக்கு தமிழ்நாட்டை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் தெரியும் பல்வேறு நலத் திட்டங்கள் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. அதனால்தான் கருணாநிதியை இந்த நாட்டு மக்கள் இன்றும் நினைக்கிறார்கள்.

இப்படி ஏதாவது ஒன்று அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு இருக்கிறதா? பழனிசாமி வாயைத் திறந்தால் சொல்வது எல்லாம் பொய்! பொய்யைத் தவிர வேறு இல்லை!

* எங்கே போனாலும் நான் விருது வாங்கி வருகிறேன், என்னை இந்தியாவே பாராட்டுகிறது என்று சொல்லி வருகிறார். அவருக்கு யார் விருது கொடுத்தது? தனக்கு தனியார் ஆங்கில ஏடு விருது கொடுத்ததாக பழனிசாமி சொல்கிறார். ஆனால், அந்த இதழை முழுமையாகப் படித்தால் தமிழகம் பழனிசாமி ஆட்சியில் எந்த வகையில் எல்லாம் பின்தங்கி இருக்கிறது என்பதுதான் முழுமையாக இருக்கிறது.

* இரண்டாம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டை தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன் என்று பழனிசாமி அறிக்கையில் சொல்கிறார். ஆனால், இது சம்பந்தமான வெள்ளை அறிக்கை தாருங்கள், தொழில் தொடங்கிய நிறுவனங்களின் பெயர் என்ன? எத்தனை லட்சம் கோடியில் தொழில் தொடங்கினார்கள்? எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? முதல்வரும், அமைச்சர்களும் வெளிநாடு போனார்களே? எந்தெந்த நாட்டில் இருந்து என்னென்ன தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்தார்கள்? என்று வெள்ளை அறிக்கை கேட்டேன். இன்று வரை பழனிசாமியால் தர முடியவில்லை.

* காவிரி உரிமையை மீட்டேன் என்கிறார் பழனிசாமி. காவிரி காப்பான் என்ற பட்டத்தையும் வாங்கியதாகச் சொல்கிறார். ஆனால் காவிரியின் குறுக்கே கர்நாடகம் கட்டும் மேகேதாட்டு அணையைத் தடுத்தாரா இல்லை? அதிகாரம் பொருந்திய காவிரி ஆணையத்தை உருவாக்கினாரா இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட குழுவும் வெறும் அதிகாரிகள் குழுவாக சிறுத்துப் போய்விட்டது.

அந்தச் சிறு குழுவும் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது. எனவே அதை வைத்து இனி எதுவும் செய்ய முடியாது. கர்நாடகத்தைக் கேள்வி கேட்க அதிகாரம் பொருந்திய அமைப்பு இதுவரை இல்லை. பழனிசாமியால் அதனை உருவாக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

* டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன் என்கிறார் பழனிசாமி. போராடும் மக்களைத் திசை திருப்புவதற்காக இப்படி ஒரு அறிவிப்பைப் பழனிசாமி செய்தாரே தவிர, டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அவர் ஆக்கவில்லை.

இதுவரை செயல்பாட்டுக்கு வந்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒரு அறிவிப்பைச் செய்தார். இது மக்களை ஏமாற்றும் தந்திரங்களில் ஒன்று. இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வந்தபோது, 'வேளாண் மண்டலம் சம்பந்தமாக நாங்கள் இதுவரை எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை' என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்லி இருக்கிறது. அப்படியானால், வேளாண் மண்டலம் என்பது வெற்று அறிவிப்பு என்பது இதன் மூலம் தெரிகிறது. இதுவும் பழனிசாமியின் பொய்களில் ஒன்று.

* காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.

இந்தத் திட்டத்தை ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்போவதாக அறிவித்துள்ளாரே தவிர, நிறைவேற்றிவிடவில்லை.

* குடிமராமத்துப் பணிகளைச் செய்து விட்டதாகவும், ஒரு விவசாயி முதல்வராக இருப்பதால்தான் இது நடக்கிறது என்றும் பழனிசாமி சொல்கிறார். குடிமராமத்து என்ற பெயரால் பில் போட்டு பணம் எடுத்துள்ளார்கள். மணல் கொள்ளை நடக்கிறது. மற்றபடி குடிமராமத்து நடக்கவில்லை. அதிமுகவினருக்குப் பணத்தைப் பங்கு பிரித்துத் தரும் திட்டமாகத்தான் அது இருக்கிறது.

* மின்மிகை மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்திவிட்டேன் என்கிறார் பழனிசாமி. அரசு நிறுவனங்களில் மின் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஒரு மாநிலத்தை மின்மிகை மாநிலம் என்று சொன்னால் மற்ற மாநில முதல்வர்கள் சிரிப்பார்கள்.

* இந்த வரிசையில் புதிய பொய்தான் மினி கிளினிக். இது மினி பொய் அல்ல. பெரிய பொய். புதிய மருத்துவர்களை வேலைக்கு எடுக்கவில்லை. புதிய செவிலியர்களை வேலைக்கு எடுக்கவில்லை. ஆனால் புதிய மருத்துவமனையை உருவாக்கி விட்டதாகத் திறப்பு விழா நடத்தி வருகிறார் பழனிசாமி.

ஆரம்ப சுகாதார நிலையத்தை இப்படி மாற்றிவிட்டு அதுதான் இது என்கிறார் பழனிசாமி. கவுண்டமணி - செந்தில் ஆகியோரின் காமெடி போல, இன்னொரு வாழைப்பழம் எங்கேன்னா? அதுதாண்ணே இது என்பதுபோல மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. இத்தகைய பொய் நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது! அதுதான் சட்டப்பேரவைத் தேர்தல்.

ஆட்சியின் கடைசி நேரத்தில் மக்களுக்கு நன்மை செய்வதைப் போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி. 2500 ரூபாயை பொங்கல் பரிசு என்ற பெயரால் கொடுக்கிறார். கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் தரச் சொன்னேன். மக்கள் அடைந்த துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. அந்த மக்களின் துயரைப் போக்குவதற்காகத்தான் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தைத் தொடங்கினோம்.

அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்துப் பொருள்கள் கொடுத்தோம். ஆட்டோ டிரைவர்கள், அன்றாட ஊதியம் வாங்குபவர்களுக்கு நிதி உதவியும் செய்தோம். பல ஊர்களில் உணவு தயாரித்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கினோம்.

நாம் ஆட்சியில் இல்லை. ஒரு அரசியல் கட்சியால் எந்த அளவுக்கு நன்மை செய்ய முடியுமோ அதைவிடக் கூடுதலாகவே செய்தோம். கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் பலரும் கடன் வாங்கி இம்மாதிரி உதவிகளைச் செய்தார்கள். அதுதான் உண்மை. ஆனால், இந்த எடப்பாடி அரசாங்கம் என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை.

5 ஆயிரம் கொடுங்கள் என்று நான் சொன்னபோது, நிதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நிவர் புயலின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 வழங்குமாறு கேட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 வழங்கச் சொன்னேன். ஆனால், 2500 ரூபாய் தரப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு என்ற பெயரால் கொடுக்கப் போகிறாராம். அது பொங்கல் பரிசல்ல, தேர்தல் வரப்போகிறது அல்லவா? அதற்காக கொடுக்கிறார்.

மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் தராமல் தேர்தல் வருவதால் தனது சுயநலத்துக்காகக் கொடுக்கிறார். அரசாங்கப் பணத்தை தனது கட்சியின் நன்மைக்குப் பயன்படுத்துகிறார்.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே, என்று சொல்வார்கள். ஒருவன், பக்கத்து வீட்டுக்கு விருந்துக்குப் போனானாம். அங்கே சமையல் பரிமாறியது அவனது மனைவியாம். கணவரைப் பார்த்ததும் நெய்யை அதிகமாக ஊத்தினாராம் மனைவி. அதுதான் ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே. அதுமாதிரி அரசாங்கப் பணத்தை எடுத்து அதிமுகவின் நன்மைக்காகச் செலவு செய்து, ஏதோ தாராள பிரபுவைப் போல தன்னைக் காட்டிக் கொள்கிறார் பழனிசாமி.

அதிமுக அரசின் மீது ஊழல் புகார்களைப் பொய்யாகச் சொல்லி வருவதாகவும், அதனை ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும் முதல்வர் சொல்லி இருக்கிறார். பொத்தாம் பொதுவாக பொய் என்று எப்படிச் சொல்ல முடியும்?

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார் கொடுத்துள்ளோம். அதனையும் ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் யாராவது மறுப்பு சொல்லி இருக்கிறார்களா? ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்களா?

'என்னுடைய உறவினர்கள் டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது' என்று பதில் சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. உறவினர்கள், பினாமிகள் பெயரால் கோடிக்கணக்கான மதிப்பு டெண்டர்கள் எடுக்கப்பட்டதற்கு இதுவரை பதில் இல்லை! யோக்கியன் என்றால் எதற்காக உச்ச நீதிமன்றம் போனார் முதல்வர்?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் பதில் என்ன? பினாமி நிறுவனங்கள் மூலமாக டெண்டர்கள் எடுத்தது குறித்து வேலுமணியின் பதில் என்ன? இவை எதற்கும் பதில் சொல்லாமல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறீர்கள்?

அவருக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். நிச்சயம் ஏமாந்து போவீர்கள்! இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது. பதவியைப் பறிக்கும். உங்கள் அரசியலுக்கே முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரிக்கை செய்து விடை பெறுகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்