பிரதமர் மோடியின் பார்வை புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது: முதல்வர் நாராயணசாமி வெளிப்படை

பிரதமர் மோடியின் பார்வை புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைய காங்கிரஸார் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். யார் தலைமை என்பது முக்கியமில்லை என்று முதல்வர் நாராயணசாமி வெளிப்படையாகப் பேசினார்.

காங்கிரஸ் இயக்கத்தின் 136-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. பேரணிக்கு மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார்.

இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., காங்., தேசியச் செயலாளர் சஞ்சய் தத், காங். நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்று கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

பேரணி முடிவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

''புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று பிரதமர் கூறுகிறார். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பேரவையில் தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தோம். இதனை கிரண்பேடி ரத்து செய்துவிட்டு புதிதாக ஒரு ஐஎஃப்எஸ் அதிகாரியை ஆணையராக நியமித்துள்ளார். வனத்துறை அதிகாரியை தேர்தல் அதிகாரியாகப் போடக் கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிமுறை. இதனால் 2-வது இடத்தில் வந்த நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்தக் காலதாமதத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசா பொறுப்பு? இதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் பொறுப்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக பிரதமர் மோடி ஆக்கிவிட்டார். நாம் கண்களை மூடினால் புதுவையையும் சட்டப்பேரவை இல்லாத ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றிவிடுவார். பிரதமர் மோடியால் நம் மாநில சுயாட்சியைப் பறிக்க முடியாது. மாநில சுயாட்சிக்காக நாங்கள் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்.

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனப் பிரதமர் கூறுகிறார். புதுவையில் ஜனநாயகப்படி ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறாரா? இது தொடர்பாக மேடையில் விவாதிக்கத் தயாரா? எனப் பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலே இல்லை.

காரைக்காலில் சனிப்பெயர்ச்சி விழா நடத்தக் கூடாது என்று கூறும் கிரண்பேடியை, ஆளுநர் பதவியில் பாஜக வைத்திருக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் காங்கிரஸார் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். ஆளுநர், மத்திய அரசு கொடுக்கும் தொல்லையால் கட்சிக்காரர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால்தான் புதுச்சேரி காப்பாற்றப்படும். தலைமைக்கு யார் வருகிறார், யார் வரவில்லை என்பது முக்கியமில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி வந்தால்தான் புதுச்சேரியின் தனித்தன்மை காக்கப்படும். இல்லையென்றால் பிரதமர் மோடி புதுச்சேரியைச் சட்டப்பேரவையில்லாத யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடுவார். இல்லையென்றால் தமிழகத்துடன் இணைத்து விடுவார். அவரின் பார்வை புதுச்சேரியின் பக்கம் திரும்பியுள்ளது."

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE