அதிமுகவினர் மூலம் ரூ.2500க்கான டோக்கன் வழங்கும் பணி; நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஸ்டாலின் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அதிமுகவினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதல்வர் பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும். டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும்” என 19.12.2020 அன்று முதல்வர் பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தபோது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரின் பேச்சு, செய்திக் குறிப்பு அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டு, இந்தத் தேதி அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்து, தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அதிமுக நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக் கொள்ள முதல்வர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு உணவு இன்றி மருந்து இன்றி மக்கள் தவித்த நேரத்தில், குறைந்தபட்சம் 5000 ரூபாயும்-அதிகபட்சமாக 7500 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். பிறகு நிவர் புயல் பாதிப்பிற்கு 5000 ரூபாய் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தேன். இரண்டையும் நிராகரித்து, அமைதி காத்தார் முதல்வர். கருணை முற்றிலும் வற்றிப் போய்விட்ட நிலையில், கரோனா கால ஊழல் டெண்டர்களில் சுறுசுறுப்பாகவும், சுயநலத்துடனும் இருந்தார்.

தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகும் முன்பு, மக்கள் படும் இன்னல்களின் ஒரு சிறு துளி கண்ணுக்குத் தெரிந்தது. கரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டைத் தாக்கி ஏறக்குறைய ஓராண்டு ஆகப் போகின்ற நேரத்தில் - அந்த கரோனாவைக் காட்டி, “2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார். கரோனா, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காலம் கடந்து இப்போது 2500 ரூபாய் “பொங்கல் பரிசாவது” கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், ஜனவரி 4-ம் தேதி முதல் பணம் வழங்குவது தொடங்கப்படும் என்று அரசு ஆணையை வெளியிட்டுவிட்டு, டிசம்பர் 21-ம் தேதியே தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து, சில பயனாளிகளுக்கு 2500 ரூபாயை வழங்கினார். தேர்தலை எண்ணி அவ்வளவு அவசரம் அவருக்கு. இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அதிமுகவினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான “டோக்கன் விநியோகம்” செய்ய வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

பொங்கல் பரிசு அரசு கஜானாவில் இருந்து வருகிறது. அது மக்களின் வரிப்பணம். அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திமுக மனமார வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அதிமுகவினரை வைத்து எப்படி வழங்கச் சொல்கிறார் முதல்வர்? அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுகவினர் ஏன் கையாள வேண்டும்? அனைத்துமே தவறுக்கு மேல் தவறாக இருப்பதோடு அனைத்து அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தப் பொங்கல் பரிசு முறையாகப் போய்ச் சேருவதில் குளறுபடிகளை ஏற்படுத்தும்.

அதில் அதிமுகவினர் குளிர் காயட்டும் என்பதற்காக, தெரிந்தே திட்டமிட்டே இப்படி டோக்கன் கொடுக்கும் பொறுப்பு அதிமுகவினரிடம் அளிக்கப்படுகிறதா என்பதை முதல்வர் பொது மக்களுக்கு விளக்க வேண்டும். ஆகவே அதிமுகவினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதல்வர் பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும் என்றும், அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி ஆகியவை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுகவினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதல்வர் உடனடியாகத் தடுக்காவிட்டால், திமுக சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்