கூட்டணியின் பெயரால் முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டை அடமானம் வைப்பதை வேடிக்கை பார்க்க முடியாது: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சித் தீர்மானத்தையே சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனப் போராடினார். அவசர நிலைப் பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்து தீர்மானம் போட்டார். ஆனால், இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தி வருகிறார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று (டிச.27) மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற 'தமிழகம் காப்போம்' மாநில மாநாட்டில், திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசியதாவது:

விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள் உயர்வுக்காக நடத்தப்பட்ட ஆட்சிதான் திமுக ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான ஆட்சி திமுக ஆட்சி. ஆனால் இன்று நடப்பது ஆட்சியல்ல, காட்சி மட்டும்தான்.

தமிழகம் காப்போம் என்றாலே தமிழகம் திருடு போய்க்கொண்டு இருக்கிறது என்று பொருள். தமிழகம் உரிமையை இழந்து தடுமாறிக் கொண்டு இருக்கிறது என்று பொருள். ஒரு காலத்தில் புகழ் மிக்க தமிழகமாக இது இருந்தது. ஆனால், இன்று அடிமைத் தமிழகமாக இருக்கிறது.

காமராஜர் முதல்வராக இருந்தார். மாநிலத்தை ஆள்வதும் காங்கிரஸ் கட்சி. மத்தியில் ஆள்வதும் காங்கிரஸ் கட்சி. ஆனாலும் தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களைக் கேட்டுப் பெற்றார் காமராஜர். வாதாடி வாங்கினார் காமராஜர்.

சமூக நீதியைக் காப்பாற்ற பெரியார் போராடிய போது, திராவிட இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நேருவை வலியுறுத்தியவர் காமராஜர்.

முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சித் தீர்மானத்தையே சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனப் போராடினார். அவசர நிலைப்பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்து தீர்மானம் போட்டார். ஆனால் இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தி வருகிறார்.

அரசியல் ரீதியாக ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி வைப்பதை நாம் விமர்சிக்கவில்லை. அந்தக் கூட்டணியின் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதைப் பற்றி நாம் கேள்வி எழுப்பப்போவது இல்லை. தமிழ்நாட்டை அடமானம் வைத்து பழனிசாமி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்றால் அதை நாம் கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது.

திமுக, மத்தியில் பல்வேறு கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்துள்ளது. பிரதமர் வி.பி.சிங், பிரதமர் குஜ்ரால், பிரதமர் தேவகவுடா, பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்துள்ளது. அப்போதெல்லாம் தமிழகத்துக்கு என்ன மாதிரியான திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதை இன்று முழுவதும் என்னால் சொல்ல முடியும்.

ஆனால், நரேந்திர மோடியை ஆதரித்ததன் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன திட்டம் கொண்டு வந்தார்? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததா? 2015இல் இருந்து ஐந்து ஆண்டுகளாக எய்ம்ஸ் நாடகம் நடக்கிறதே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை.

மாநில உரிமைகள் அடமானம்,

நிதி உரிமைகள் அடமானம்,

தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்துக்கு மரியாதை இல்லை,

பேரிடர் கால நிதி தருவது கிடையாது,

ஜிஎஸ்டி நிதி கிடையாது,

இந்தி திணிக்கப்படுகிறது,

தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,

கீழடியின் பெருமை மறைக்கப்படுகிறது,

சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டப்படுகிறது,

சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.

இப்படி தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட மொத்த பின்னடைவையும் கடந்த பாஜக - அதிமுக காலத்தில் பார்த்துவிட்டோம். இனியும் பொறுக்க முடியாது. பொங்கி எழுவோம். தமிழகம் மீட்போம்”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்