நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பொதுமக்களுக்கு வாக்குகள் கொடுத்து மனு பெற்றார் ஸ்டாலின்: அந்த மனுக்கள் என்னாயின?- முதல்வர் பழனிசாமி கேள்வி

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின், அவர்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று திண்ணையில் பெட்ஷீட் விரித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி மனுக்களைப் பெற்றார்கள். அந்த மனுக்கள் அனைத்தும் எங்கே போயின? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“இந்த இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை. தொண்டனுக்கும் மதிப்பு கொடுக்கின்ற ஒரே இயக்கம் அதிமுக இயக்கம். மேடையிலே வீற்றிருக்கிறவர்கள், என்ன தொழிலதிபர்களா? மிட்டா மிராசுதாரர்களா? எல்லாம் சாதாரண குடும்பத்திலே பிறந்தவர்கள். அப்படி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் எல்லாம், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தன் பிள்ளைகளைப் போல் பாவித்து, உழைக்கின்றவர்களுக்குப் பதவி வழங்கி இன்றைக்கு மேடையிலே அமர்ந்திருக்கின்றோம்.

இங்கே பலர் பேர் பதவிக்கு வர இருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட அருமையான இயக்கத்திலே நாம் பணியாற்றிக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கின்றேன். எத்தனை இயக்கங்கள் இருந்தாலும் அந்த இயக்கங்கள் எல்லாம் தங்களுடைய வாரிசுகள்தான் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், அதிமுகவில்தான் கட்சிக்கும், தலைமைக்கும் யார் விசுவாசமாக இருக்கின்றார்களோ, யார் கட்சிக்கு உழைக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு பதவி கதவைத் தட்டி இல்லம் தேடி வரும்.

இன்றைக்கு வேண்டும் என்றே ஸ்டாலின் ஊர் எல்லாம் சுத்தி பேசிக்கொண்டிருக்கிறார். எடப்பாடி தலைமையிலான இந்த அரசு நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்ற ஒரு அவதூறு பிரச்சாரத்தை, ஒரு பொய்யான பரப்புரையை தினந்தோறும் பரப்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தினுடைய முதல்வராக இருந்த காலத்திலே கொண்டுவந்த திட்டங்கள், ஜெயலலிதா தமிழகத்தினுடைய முதல்வராக இருந்த காலத்திலே கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் சிந்தாமல் சிதறாமல் மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த இருபெரும் தலைவர்கள் தந்த நம்முடைய அரசு, புதிய புதிய திட்டங்கள், அவர்கள் கண்ட கனவினை இன்றைக்கு நனவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் எனக்கு முன்னாலே பேசிய அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகளும் கோடிட்டுக் காட்டினார்கள். நம்முடைய ஆட்சியிலே என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதைச் சுருக்கமாகச் சொன்னார்கள். நானும் சிலவற்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஏனென்றால் முதல்வராக இருக்கின்ற காரணத்தினாலே நாம், நம்முடைய அரசு மக்களுக்கு என்னென்ன திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். 2000 அம்மா மினி கிளினிக், இன்றைக்கு ஏழை எளிய மக்கள் எங்கு நிறைந்திருக்கின்றார்களோ, அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதி மக்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கக் கூடிய அற்புதமான திட்டத்தைக் கொண்டுவந்த அரசு அதிமுக அரசு.

ஏழை மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். இதைத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கனவு கண்டார்கள், அதை நனவாக்கிய அரசு என்னுடைய அரசு என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். அதேபோல இன்றைக்கு அம்மா மினி கிளினிக் மட்டும் அல்ல, இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக அளவில் திறந்த ஒரே அரசு, இந்த அரசுதான்.

கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய மக்களுக்கும், நகரத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய மக்களுக்கும் உரிய சிகிச்சை அந்தப் பகுதியிலே கிடைக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த மருத்துவமனைகள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்கிறேன். அதேபோல எனக்கு முன்னாலே தெரிவித்தார்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க் கட்சிகள் கேட்கவில்லை. பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை. இன்றைக்கு நாமாக சிந்தித்தோம், நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன். கிராமத்தில் ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவன்.

இன்றைக்கு 41 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்று கொண்டிருக்கின்றார்கள். 41 சதவீதம் படிக்கின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் கடந்த ஆண்டு வெறும் 6 இடங்கள் மட்டும்தான் கிடைத்தது. அன்றைக்கு திமுக தலைவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்தார். அப்போது 40 மாணாக்கர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா நுழைவுத் தேர்வை நீக்கினார்.

அப்போதும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு மருத்துவக் கல்வி பயில போதிய அளவு இடம் கிடைக்கவில்லை. பின்னர் நீட் தேர்வின் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் 41 விழுக்காடு மாணாக்கர்களுக்கு வெறும் 6 மாணாக்கர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தது. எனவே 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதனால் இந்த வருடம் 313 மாணவச் செல்வங்கள் எம்.பி.பி.எஸ் பயிலவும், 92 மாணாக்கர்களுக்கு பல் மருத்துவக் கல்லூரியில் பயிலவும் இடம் கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு ஜெயலலிதா அரசு. அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க இருக்கிறோம். அதன் மூலம் 1650 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்படும்போது அதில் ஏறத்தாழ 135 இடங்கள் எம்.பி.பி.எஸ் பயில இடம் கிடைக்கும். இதனால் மொத்தமாக ஏறத்தாழ 448 மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு உருவாகும்.

தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது 1,945 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாக 2017ஆம் ஆண்டு வரை எம்பிபிஎஸ் பயிலக்கூடியவர்கள் எண்ணிக்கை 3,060 ஆக உயர்ந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உங்களுடைய அன்பாலும், ஆசியாலும், இங்குள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவால் நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கூடுதலாக 590 இடங்கள் உருவாக்கப்பட்டன.

அதற்குப் பிறகு தற்போது 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவ்வளவு மருத்துவ இடங்களைத் தோற்றுவித்து ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு நிலை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல கல்வித்துறையை எடுத்துக் கொண்டால், 37,558 அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைக்கிறது. அதேபோல அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபொழுது 32.9 விழுக்காடு மட்டுமே உயர்கல்வி பயின்று வந்தனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் இருந்து இன்றுவரை புதிதாக அரசு கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஐடிஐக்கள் உருவாக்கியதன் விளைவாக 49 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வி படிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சாதனைகளையும் இந்த அரசுதான் புரிந்துள்ளது. குடிமராமத்து திட்டம் ஒரு கனவுத்திட்டம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கின்றோம். தமிழகத்தைப் பொறுத்தவரை நீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியுள்ளோம். அந்த நிலையைப் போக்குவதற்காக குடிமராமத்து திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினோம்.

இத்திட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பாக 6,211 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்காக ஏறத்தாழ ரூபாய் 1,418 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5,543 பணிகள் நிறைவு பெற்றுள்ளன, எஞ்சிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் அனைத்தையும் தூர்வாரிய காரணத்தால் தற்பொழுது பெய்த மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிரம்பியிருக்கின்ற காட்சியைப் பார்க்க முடிகிறது.

ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் ஏரிகளைச் சீரமைத்துள்ளோம். பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒருசொட்டு கூட வீணாகாமல் பாதுகாக்க தமிழகம் முழுவதும் ஏரிகள் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு ஏறத்தாழ ரூபாய் 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வேளாண்மைக்கும், குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கின்றது.

சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகள் ஏறத்தாழ 93 விழுக்காடு நிரம்பியுள்ளது. இதன் மூலம் சென்னை மக்களுக்கு ஓராண்டு முழுவதும் தண்ணீர் வழங்க முடியும். ஏறக்குறைய 67 ஆண்டு காலமாக சென்னை மாநகர மக்களுக்கு புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. ஜெயலலிதாவின் எண்ணத்தில் தோன்றிய தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். அதில் தற்பொழுது 0.6 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏராளமான திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் வாயிலாக சாலை வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, தெருவிளக்கு வசதி என பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

சென்னையில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தியுள்ளோம். பாலங்களைக் கட்டிக் கொடுத்துள்ளோம், சாலைகளைச் சீரமைத்துள்ளோம், வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரூபாய் 440 கோடி மதிப்பீட்டில் 196 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் இணைப்புக் கால்வாய்களைப் பழுது பார்த்துள்ளோம். சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணியை ரூபாய் 1,380 கோடி மதிப்பீட்டில் 406 கிலோ மீட்டர் நீளத்திற்கு முடித்துள்ளோம்.

ரூபாய் 3,200 கோடி மதிப்பீட்டில் பசுபதியாறு வடிநிலப் பகுதியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகர மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த காலங்களில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தற்போது வரை ஏறத்தாழ 19 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ள நிலையைக் காண முடிந்தது. அதனையும் சீர்செய்யும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது, இந்த அரசு என்ன செய்தது என்று கேட்கிறார்? ஐந்தாண்டு காலம் சென்னை மாநகர மேயராக உங்களுக்குப் பதவி கொடுத்தபோது தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? உங்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? 3,000 இடங்களில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்ற ஏதாவது திட்டங்களை அமல்படுத்தினீர்களா? எதுவும் செய்யவில்லை.

உங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளத்தான் நேரம் சரியாக இருந்தது. அதன் பிறகு துணை முதல்வராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். அப்போதாவது விழித்து, சென்னை மாநகர மக்களுக்கு ஏதாவது திட்டங்களை நிறைவேற்றலாம் என்று எண்ணிப் பார்த்தீர்களா? தேர்தல் வரும்போது மட்டும் சென்னை மாநகரைச் சுற்றி சுற்றி வருவார். இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று கூறுவார். அரசின் மீது வீண்பழி சுமத்துவார். ஏமாந்து விடாதீர்கள். சென்னை மாநகர மக்களே, உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே அரசு தமிழக அரசு என்பதை உங்களிடம் நேர்படக் கூறிக்கொள்கிறேன்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின், அவர்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று திண்ணையில் பெட்ஷீட் விரித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி மனுக்களைப் பெற்றார்கள். அந்த மனுக்கள் அனைத்தும் எங்கே போயின? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களை ஏமாற்றி அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று சொன்னீர்களே, அந்த மனுக்கள் எங்கே போய்விட்டன? குப்பைத் தொட்டிக்கு போய்விட்டதா? இப்போது, மீண்டும் கிராம சபை என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்.

அரசு நிகழ்த்துகிற அந்தத் திட்டத்தை இவர்கள் மறைமுகமாக அந்தப் பெயரைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் மனு வாங்கி மக்களின் குறைகளைத் தீர்க்கிறாராம். ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்களுக்குக் குறைகளைத் தீர்க்க முடியவில்லையே, அந்த மனுக்கள் எங்கே போயின? நீங்கள் மனு வாங்கிய காலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் மனு வாங்கி எப்படி நிறைவேற்ற முடியும்? அந்த மனுவை எங்களிடம் கொடுத்தீர்களா? அதையும் கொடுக்கவில்லை. மக்களை ஏமாற்றி, நாடகமாடி, மக்களைத் திசைதிருப்பி, மக்களிடத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.

இப்போது அது நடக்காது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், ஐந்து சவரனுக்குக் குறைவான நகை, கூட்டுறவு வங்கியிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ, தனியார் வங்கியிலோ அடமானம் வைத்து இருந்தால் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அந்தக் கடனுக்கு உண்டான தொகையை அரசே செலுத்துமென்று திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார்.

இதற்காக மத்தியில் குரல் கொடுத்தீர்களா? நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஏதாவது செய்தீர்களா? மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரத்தைப் பெற்றுத் தந்தீர்களா? நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தானே மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? அவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. ஏராளமான வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள். வாக்குறுதிகள் கொடுப்பது எளிது. ஆனால், நிறைவேற்ற முடியாது. நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக அரசுதான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் விக்கிரவாண்டியிலும், 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்குநேரியிலும் அசுர பலத்தோடு வெற்றி பெற்றோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் வேறு என உணர்ந்து மக்கள் வாக்களித்தார்கள். எனவே, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச்சிறப்பான வெற்றியை நாம் பெற முடியும் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

வேளாண்மை, மின்சாரம் போக்குவரத்து, உயர் கல்வி என பல துறைகளில் விருதுகளைப் பெற்றுள்ளோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து பல விருதுகளைப் பெற்று இருக்கின்றோம். உணவு தானிய உற்பத்தியில் கிருஷி கர்மாண் விருதை தொடர்ந்து பெற்று கொண்டிருக்கிறோம். சிறப்பான திட்டங்களைத் தீட்டி இந்திய அளவில் அதிகமான தேசிய விருதுகளைப் பெற்ற முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இன்று திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடுமையான வறட்சி, புயல், மழைக் காலங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி அதிலும் வெற்றி கண்டோம். அதன்பிறகு கரோனா வைரஸ் தொற்றைச் சரியான முறையில் கையாண்டதன் விளைவாக இந்தியாவிலேயே நோய்த்தொற்று குறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அண்மையில் பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடத்திய கூட்டத்தில் தமிழகத்தில் ஆர்.டி. பிசிஆர் பரிசோதனை அதிகமாக மேற்கொண்டதன் வாயிலாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

அதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டு நமக்குப் புகழாரம் சூட்டினார் பாரத பிரதமர். கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களை 8 மாத காலம் விலையில்லாமல் கொடுத்த ஒரே அரசு தமிழக அரசு. அதேபோல, நோய்த்தொற்றுக் காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் இருந்த காரணத்தினால், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கிய அரசு தமிழக அரசு.

சென்ற தைப்பொங்கலுக்கு நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 1,000 கொடுத்தோம். இந்த ஆண்டு 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2,500 கொடுக்கப்படும். அத்துடன் முழுக் கரும்பும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை எளிய மக்களுக்காக வழங்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் தொழில் வளம் பெருக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் 2015-ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தொழில் முதலீட்டை ஈர்த்தார். தமிழக அரசு 2019 ஜனவரி மாதம் சென்னையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ ரூபாய் 3.05 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. நேரடியாக 5 லட்ச வைரஸ் தொற்றுக் காலத்திலும் ஏறத்தாழ ரூபாய் 60,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளோம்.

கரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். படித்த பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் என முனைப்போடு செயல்பட்ட அரசு ஜெயலலிதாவின் அரசு. ஆனால் வேண்டுமென்றே, திட்டமிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய்யான அறிக்கை ஒன்றைத் தயார் செய்து, என் மீதும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் ஊழல் பட்டியல் கொடுத்துள்ளார்.

அந்த ஊழல் பட்டியலில் டெண்டர் வழங்கியதில் ஊழல் என்று சொல்கிறார். அந்த டெண்டரை ரத்து செய்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அது கூட தெரியாத திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பொய் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த ஊழல் பட்டியல் அனைத்தும் பொய். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என அவர் நினைத்தார். மக்கள் எழுச்சியின் காரணமாக மீண்டும் அதிமுகதான் வெற்றி பெறும் என்று தெரிந்தவுடன், தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சென்று பொய்யான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் ஸ்டாலின்.

எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செய்திருக்கிறது. ஆகவே, அதிமுகதான் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற எங்களுடைய அரசு தொடர்ந்து பாடுபடும்.

ஜெயலலிதா சட்டப்பேரவையில் எனக்குப் பின்னாலும் நூற்றாண்டு காலம் அதிமுக இயக்கம் மக்களுக்காக உழைக்கும் என்று சொன்னார். அதை நாம் படைப்போம். அதுதான் நமது லட்சியம். ஒவ்வொரு தொண்டனும் வீறுகொண்டு எழுந்து, இந்தத் தேர்தலில் தாம் தான் வேட்பாளர் என்று எண்ணி, களத்தில் இறங்கி, தேர்தல் என்ற போரிலே நாம் எதிரிகளை ஓட, ஓட விரட்டியடிப்போம் வெல்வோம், வெற்றி பெறுவோம். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரையும் நாம் தெய்வங்களாக வணங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா வாழ்ந்த "வேதா நிலையம்" இல்லம் விரைவில் நினைவில்லமாக மாற்றப்படும். அதையும் பொதுமக்கள் பார்த்துச் செல்லலாம் . அதையும் எங்களுடைய அரசு நடைமுறைப்படுத்தும் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்