பறவைகள் வேட்டை; தமிழக-புதுச்சேரி வனத்துறையினர் கூட்டாக ஆய்வு: பறிமுதல் செய்த இறைச்சியைப் பறித்து ஓடிய வேட்டையாளர்கள்

By செ.ஞானபிரகாஷ்

பறவைகள் தொடர்ந்து கொல்லப்படும் சூழலில் தமிழக-புதுச்சேரி வனத்துறையினர் கூட்டாக இன்று ஆய்வு நடத்தியதில் ஏராளமான பறவைகளின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் வேட்டையாடியோர் பலர் இறைச்சியைப் பறித்து தப்பியோடிய சம்பவம் புதுச்சேரி அருகே நடந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வனத்துறை பகுதியில், பறவைகள் மற்றும் விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு சந்தை அமைத்து வெளிப்படையாகவே அதன் இறைச்சிகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி வில்லியனூர், கூடப்பாக்கம், பத்துக்கண்ணு பகுதிகளில் நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுவாக, வன உயிரினப் பாதுகாப்பு சட்டப்படி அட்டவணைக்குட்பட்ட விலங்குகளைக் கொல்வது சட்டப்படி குற்றம். ஆனால், இப்பகுதியில், ஊசுடு ஏரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வனத்துறை வழியாகச் செல்கிறது. சீசன் காலங்களில் 53 வகையான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. எனவேதான், இந்தப் பகுதி கடந்த 2008-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

அபூர்வ பறவைகள், விலங்குகளை அங்குள்ள சிலர் கொன்றும், பிடித்தும், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சந்தையில் விற்கின்றனர். இது சந்தை போன்று, பெரிய அளவில் சாலைகளில் பறவைகள் மற்றும் விலங்குகளைத் தொங்கவிட்டு விற்பனை செய்து வருகின்றனர். வனத்துறையினர் இதைக் கண்டுகொள்வதில்லை என்ற புகாரும் அதிக அளவில் உள்ளது.

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக பத்துக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பறவைகள் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதுகுறித்து வனத்துறையினருக்குப் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தமிழக வனத்துறையினரோடு, புதுவை வனத்துறையினர் இணைந்து இன்று நரிக்குறவர்கள் வாழும் பகுதிகளில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

புதுவை துணை வனக் காப்பாளர் மஞ்சுனவள்ளி தலைமையில் 15 வனத்துறை ஊழியர்கள் இன்று காலை புதுவை கூடப்பாக்கம், மூர்த்திக்குப்பம், வில்லியனூர் ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் காலனிக்குள் அதிரடியாகப் புகுந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக்காக அதிக பறவைகள் வேட்டையாடப்பட்டிருந்தன.

அவர்களது வீட்டு வாசலில் கொக்கு, நொள்ளைமடையான், கவுதாரி, குயில் உள்ளிட்ட பறவைகள் கொல்லப்பட்டு இறைச்சிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மேலும் வளர்ப்பிற்காக கிளிகள் பிடிக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.

அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால் கோபமடைந்த நரிக்குறவர்கள் சிலர் தங்களது வீட்டில் இருந்த துப்பாக்கிகளை எடுத்துவந்து வனத்துறையினரைத் தாக்க முயன்றனர். அவர்களது வாகனங்களைச் சேதப்படுத்தினர்

அப்போது வனத்துறையினருக்குப் பாதுகாப்பாக வந்திருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து பறிக்க முயன்றனர். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பறவைகளின் இறைச்சிகளையும், துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதற்கு நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினரைச் செல்லவிடாமல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கை விடுத்ததையடுத்து நரிக்குறவர்கள் வனத்துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த பறவைகளின் இறைச்சியை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினர்.

இதனையடுத்து எஞ்சிய சுமார் 50 பறவைகளின் இறைச்சியையும், வீடுகளில் வளர்க்க வைத்திருந்த 25 கிளிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கேட்டதற்கு, "பொதுவாக, வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பெலிக்கான்ஸ், காடை, உடும்பு, புழுகு பூனை உள்ளிட்ட விலங்குகளைக் கொல்வது சட்டப்படி குற்றம். இதற்கு ஜாமீன் வழங்குவது தடுக்கப்படுவது மட்டுமின்றி குறைந்தது 3 ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம்.

ஊசுடு ஏரியில் பறவைகள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் வேட்டையாடுவோர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டே சென்று, அவை அமரும் மரத்தின் இலைப் பகுதியில் ஒரு வகை விஷத்தை ("பால்டாயிலை') உருண்டையாக வைக்கின்றனர். இதில், வந்து அமரும் பறவைகள் அவற்றைத் தின்று இறந்து விடுகின்றன. இத்தகைய பறவைகளை விற்பனை செய்வதால் இந்த இறைச்சியை உட்கொள்பவர்க்கு பாதிப்பு கூட ஏற்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு அரசு மாற்றுத்தொழில் கற்றுத் தராததும் இப்பிரச்சினை நீடிப்பதற்குக் காரணம்" என்று குறிப்பிடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்